பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை - ஆட்டோ டிரைவர் கைது

5 hours ago 2

கோவை ,

கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியைச் சேர்ந்தவர் ஜெபராஜ் (வயது 39), ஆட்டோ டிரைவர். இவர் தினமும் பள்ளிக்கூட மாணவ-மாணவிகள் சிலரை பள்ளிக்கு அழைத்து செல்வது வழக்கம். ஜெபராஜின் ஆட்டோவில் அந்த பகுதியை சேர்ந்த 7-ம் வகுப்பு மாணவியும் சென்று வந்தார். சம்பவத்தன்று 7-ம் வகுப்பு மாணவியை பள்ளியில் கொண்டு விடுவதாக ஜெபராஜ் ஆட்டோவில் அழைத்து சென்றார். ஆனால் அவர் பள்ளிக்கு செல்லாமல் ஏதோ காரணம் கூறி மாணவியை தனது வீட்டிற்கு அழைத்து சென்றதாக தெரிகிறது. பின்னர் அவரை வீட்டிற்குள் அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி அலறியதுடன், சத்தம்போட்டு அழுதுள்ளார்.

இதையடுத்து அந்த மாணவியை சமாதானப்படுத்திய ஆட்டோ டிரைவர், இதுகுறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டி பள்ளியில் கொண்டு இறக்கி விட்டுசென்றுவிட்டார். பள்ளிக்கு தாமதமாக வந்ததாலும், மாணவி அழுது கொண்டே இருந்ததாலும் அவரிடம் ஆசிரியர்கள் விசாரித்தனர். அப்போது அவர் ஆட்டோ டிரைவர் பாலியல் தொல்லை கொடுத்தது குறித்து கூறியுள்ளார். உடனடியாக ஆசிரியர்கள் மாணவியின் பெற்றோரை பள்ளிக்கு அழைத்து, மாணவிக்கு நடந்த பாலியல் சம்பவம் குறித்து அவர்களிடம் தகவல் தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் பெற்றோர் பேரூர் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் ஆட்டோ டிரைவர் ஜெபராஜ் பள்ளிக்கூட மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

Read Entire Article