சென்னை,
தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்ற பெயருக்கு சொந்தக்காரர் இயக்குனர் சங்கர். இவர் கடந்த 1993 இல் ஜென்டில்மேன் படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவரது இயக்கத்தில் வெளியான "இந்தியன், அந்நியன், சிவாஜி, எந்திரன் மற்றும் 2.0 போன்ற திரைப்படங்கள் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ஆனால் ஷங்கரின் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான 'இந்தியன் 2' திரைப்படம் எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறவில்லை.
இயக்குனர் ஷங்கர் தற்போது பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து 'கேம் சேஞ்சர்' படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடித்துள்ளார். ஊழல் அமைப்புக்கு எதிராக போராடி நீதியை நிலைநாட்டும் ஐஏஎஸ் அதிகாரியாக ராம் சரண் நடித்துள்ளார். இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் ஷங்கர் கேம் சேஞ்சர் திரைப்படம் குறித்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்து வந்தார். அப்போது ஷங்கரிடம் பயோபிக் படம் எடுக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறதா? என்று கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு, இதுவரைக்கும் அந்த மாதிரி ஐடியா இல்லை. ஒரு வேலை அப்படி எடுப்பதாக இருந்தால் ரஜினியின் பயோபிக் படத்தை தான் எடுப்பேன். இதுவரைக்கும் இது பற்றி எனக்கு தோன்றவில்லை, நீங்கள் கேட்டவுடன் ரஜினி தான் என் நினைவுக்கு வந்தார். நானே இப்படி சொல்வேன் என்று எதிர்பார்க்கவில்லை" என்று பதிலளித்துள்ளார். இந்த பேட்டியானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இயக்குனர் ஷங்கர் ரஜினியை வைத்து எடுத்த "சிவாஜி, எந்திரன், எந்திரன் 2.0" என மூன்று திரைப்படங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.