பயிர் சாகுபடி குறித்த மின்னணு அளவீடு பணியிலிருந்து மாணவர்களை விடுவிக்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்

1 week ago 3

சென்னை,

தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

ஒருங்கிணைந்த வேளாண் திட்டங்களை வகுக்க ஏதுவாக, மாநிலத்தில் உள்ள நிலங்களின் தன்மை, அளவு, பயிர் வகைகள், விவசாயிகளின் வருமானம், கடன், காப்பீடு போன்ற விவரங்களை மின்னணு முறையில் தொகுத்தளிக்க மத்திய அரசு கோரியிருந்த நிலையில், இந்தப் பணிகளை வருவாய்த் துறை மூலம் தமிழ்நாடு அரசு மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால், இதைச் செய்ய தி.மு.க. அரசு தவறிவிட்டது. இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்கள் எல்லாம் பயிர் சாகுபடி குறித்த மின்னணு அளவீடு பணிகளை முடித்துள்ள நிலையில், தமிழ்நாடு இப்போது தான் அந்தப் பணியை ஆரம்பித்துள்ளது.

கடந்த ஒரு வார காலமாக, நாமக்கல், கடலூர், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பயிர் சாகுபடி குறித்த மின்னணு அளவீடு பணிகள் நடைபெற்று வருவதாகவும், இந்தப் பணியில் அரசு மற்றும் தனியார் வேளாண் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர் ஈடுபடுத்தப்பட்டு இருப்பதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வருகின்றன.

கிராம கணக்குகளைப் பராமரித்தல், பயிர் ஆய்வுப் பணி மேற்கொள்ளுதல், சர்வே கற்களை பராமரிப்பது, நில வரி வசூலித்தல், நில ஆக்கிரமிப்புகள் தொடர்பாக அறிக்கை அனுப்புதல் போன்றப் பணிகளை வருவாய்த் துறை மேற்கொண்டு வருவதால், பயிர் சாகுபடி குறித்த மின்னணு அளவீடு பணிகளை வருவாய்த் துறை மேற்கொள்வதுதான் பொருத்தமாக இருக்கும் என்ற நிலையில், வேளாண் கல்லூரி மாணவ, மாணவியரை வைத்து பயிர் சாகுபடி குறித்த மின்னணு அளவீட்டுப் பணியை மேற்கொள்ளும் தி.மு.க. அரசின் செயல் கண்டனத்திற்குரியது.

மேற்படி பணியில் வருவாய்த் துறையினரை ஈடுபடுத்தாதற்குக் காரணம், இந்த கூடுதல் பணிக்கு அவர்கள் கோரிய ஊக்கத் தொகையை அளிக்க தி.மு.க. அரசு முன்வராததுதான் என்று சொல்லப்படுகிறது. கடந்த மூன்று ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் மாநில அரசின் வரம்பிற்குட்பட்ட அனைத்து வரிகளும் பன்மடங்கு உயர்த்தப்பட்ட நிலையில், வருவாய்த் துறையினருக்கு ஊக்கத் தொகை கொடுக்க இயலவில்லை என்று தி.மு.க. அரசு கூறுவது மிகவும் வேதனைக்குரிய செயலாகும். தி.மு.க.வின் நிதி மேலாண்மைக்கு, நிர்வாகத் திறமையின்மைக்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

மேலும், மேற்படி பணியில் அனுபவம் இல்லாத வேளாண் கல்லூரி மாணவ மாணவியரை ஈடுபடுத்துவது கணக்கில் தவறுகளை ஏற்படுத்த வழிவகுப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களுடைய கல்விக்கும் குந்தகம் விளைவிக்கும். எனவே, பயிர் சாகுபடி குறித்த மின்னணு அளவீடு பணிகளை வருவாய்த் துறை மூலம் மேற்கொள்ளவும், மேற்படி பணியிலிருந்து வேளாண் கல்லூரி மாணவ, மாணவியரை விடுவிக்கவும் தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Read Entire Article