பன்முகத் திறமையில் மிளிரும் சர்மிளா நாச்சியார்!!!

1 day ago 2

பெண்கள் பல்வேறு துறைகளில் மிளிர்வது தனித் திறமைகளால் தான் என்பதற்கு எடுத்துக்காட்டாக கவிஞர், எழுத்தாளர், தமிழ்ப் பேராசிரியர், youtuber எனப் பல்வேறு துறைகளிலும் தனது பன்முகத் திறமையில் கலக்கிவருகிறார் மதுரையை சேர்ந்த சர்மிளா நாச்சியார். சாத்தூர் அரசு கலைக்கல்லூரி, அழகப்பா பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகவும் இருந்துள்ளார். வைகை மக்கள் இயக்க உறுப்பினர் வாசகர் வட்டம் ரோட்டரி சமஸ்கார் பாரதி கலை இலக்கியக் குழு உறுப்பினர் ஒருங்கிணைப்பாளர்,  சினிமா தணிக்கைத் துறை உறுப்பினர் எனப் பல்வேறு பொறுப்புகளில் இருந்தாலும் தன்னம்பிக்கை பேச்சாளர் என்ற தனித்துவத்துடன் வலம் வருகிறார். தான் படித்த கல்லூரியிலேயே தன்னம்பிக்கைப் பேச்சாளராக பேசியது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார். ஷர்மிளா நாச்சியார் என்ற பெயரில் வாழ்வியல் மற்றும் தன்னம்பிக்கை தொடர்பான வீடியோக்களை சமூகவலைத்தளங்களில் பதிவேற்றிவருகிறார்.

உங்கள் கல்வி குறித்து…

நான் விருதுநகர் க்ஷத்திரிய மகளிர் மேல்நிலைப்பள்ளியில் எனது பள்ளிப்படிப்பை முடித்தேன். அதற்குப் பின்பு பி.ஏ இளங்கலைப் பட்டம் V.V.V கல்லூரியில் படித்தேன். எம்.ஏ முதுகலைப் பட்டம் விருதுநகர் V.H.N.S.N கல்லூரியில் படித்தேன். படிக்கும் பொழுதே Diploma in Tourism management & Diploma in Gandhian thought படித்தேன். அதன் பிறகு எம்.பில் மதுரை செந்தமிழ்க் கல்லூரியில் படித்து முடித்தேன். கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழகம் நடத்திய SETஎனும் பேராசிரியர் தகுதித்தேர்விலும் தேர்ச்சி ஆகினேன். பின்பு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் MSW மற்றும் NGO management Diploma முடித்தேன்.மதுரை கூடல் நகர் பகுதியில் மழலையர் பள்ளி ஒன்றை துவங்கினேன். முதலில் ஒரு குழந்தையோடு தான் துவங்கினோம். இன்று நிறைய குழந்தைகள் உள்ளனர். இப்பள்ளியை இன்னும் பெரிய அளவிலான ஒரு கல்வி நிறுவனமாக உருவாக்க வேண்டும் என்பது எனது கனவாக இருக்கிறது.

உங்கள் பணிகள் எதை நோக்கிப் பயணிக்கிறது?

நான் தற்போது மேடை பேச்சினில் நிறைய கவனம் செலுத்தி வருகிறேன். நிறைய விழாக்களில் தன்னம்பிக்கை நிறைந்த கருத்துக்களைப் பேசி பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த நினைக்கிறேன். சினிமா தணிக்கை உறுப்பினராக தற்போது செயல்பட இருக்கிறேன். அதற்கான பயிற்சிகள் முடித்து தணிக்கை குழுவில் இடம்பெற்றுள்ளேன். எனது முதல் புத்தகம் “முதல் ஞானங்கள்” என்கிற பெயரில் கவிதை தொகுதியாக வெளி வந்து பலரின் பாராட்டுதல்களை பெற்றது. மேலும் நிறைய கவிதைகளை எழுதி வருகிறேன். அதனை புத்தகமாக போடும் எண்ணங்களும் இருக்கிறது.எதிர் காலத்தில் நான் இந்த சமூகத்தில் என் திறமையின் மூலமாக தவிர்க்க முடியாத ஆளுமையாக உருவாக வேண்டுமென்பதே என் ஆகப் பெரும் லட்சியம். நான் பெரிய அளவில் கல்வி நிறுவனங்களை தொடங்கி சாதிக்க வேண்டும் என்கிற ஆசைகள் உண்டு. அதே போன்று ஆதரவற்ற முதியோர் இல்லம் மற்றும் சமுதாயத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஒரு பாதுகாப்பு இல்லம் தொடங்க வேண்டும் என்பது என் மிகப்பெரிய ஆசைகளாக இருக்கிறது. அதற்கான கடுமையான உழைப்புகளோடு கூடிய முன்னெடுப்புகளையும் செய்துவருகிறேன்.

உங்களுக்குக் கிடைத்த விருதுகள் மற்றும் பாராட்டுகள் குறித்து …

கல்லூரி நாட்களில் இருந்தே நான் நிறைய விருதுகள் வாங்கியுள்ளேன். கடந்த 2023 ம் ஆண்டு உதயா அறக்கட்டளை மூலம் தமிழன் தமிழச்சி விருது எனக்கு வழங்கப்பட்டது. பிறகு பாரதியார் அறக்கட்டளை சார்பாக என் கவிதை விருதுக்கு தேர்வானது. அதன் பிறகு அதே ஆண்டு என் கவிப்பணிக்காக புதுச்சேரி சபாநாயகர் திரு. ஏம்பலம் செல்வம் அவர்கள் மூலமாக விருதுகள் வழங்கப்பட்டது. பிறகு 2024 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மகிழ்ச்சி FM மற்றும் KG hospital இணைந்து நடத்திய கவிதைப் போட்டியில் எனக்கு விருதுகள் கோவை MP.திரு. நடராஜன் அவர்கள் கையால் எனக்கு வழங்கப்பட்டது. அதன்பிறகு மலேசியா முத்தமிழ்ச்சங்கம் மூலமாக சிறந்த பெண் எழுத்தாளர் விருது வழங்கப்பட்டது. பின்பு திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகமும் ஜோசப் கண் மருத்துவமனை மற்றும் திருச்சி Butterfly ரோட்டரி சங்கம் இணைந்து நடத்திய மகளிர் தின விழாவில் எனக்கு சாதனைப் பெண்மணி விருது வழங்கப்பட்டது. கொற்றவை நியூஸ் மூலமாக எனக்கு புரட்சி நாயகி விருது வழங்கப்பட்டது. மதுரை கலாம் அறக்கட்டளை சார்பாக சமூகச் செயற்பாட்டாளர் விருது வழங்கப்பட்டது. தென்னிந்திய சமூக பண்பாட்டு மையம் மூலமாகவும் விருதுகள் வழங்கப்பட்டது. சமீபத்தில் Jayden production விழாவில் அறிவுசார் பயிற்றுநர் விருது வழங்கப்பட்டது.

வளர நினைக்கும் பெண்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது…

பெண்கள் அனைவரும் கல்வி கற்பது என்பது மிகவும் அவசியமான ஒன்று. தற்சார்பு நிலை ஒவ்வொரு பெண்களின் இலக்காக இருக்க வேண்டும். பொருளாதாரக்காரணங்களுக்காக யாரிடமும் உங்கள் சுயத்தை இழக்காதீர்கள். தனக்காகத் தனிச்சேமிப்பு வைத்திருத்தல் மிகவும் அவசியம். திருமணம் முடிந்துவிட்டது என்று உங்கள் லட்சியங்களை மறந்து காலத்தை வீணாக்காதீர்கள். உங்களை மட்டும் நம்புங்கள். திறமையை வளர்த்துக் கொண்டால் இழந்ததை மீட்கும் சக்தியை பெறலாம். கொஞ்சம் துணிச்சலுடன் அறிவோடு செயல்புரிந்தால் போதும் எந்த இடத்திலும் நாம் தவிர்க்க முடியாத ஆளுமையாக மாறிவிடுவோம் என்பது உறுதி என தன்னம்பிக்கை மிளிர பேசுகிறார் பன்முகத் திறமையாளர் சர்மிளா நாச்சியார்.
– தனுஜா ஜெயராமன்.

The post பன்முகத் திறமையில் மிளிரும் சர்மிளா நாச்சியார்!!! appeared first on Dinakaran.

Read Entire Article