பதிப்பகத்துறையில் தடம் பதிக்கும் சாதனைப் பெண்மணி!

5 days ago 5

சென்னையைச் சேர்ந்தவர் காமாட்சி சீனிவாசன். இவர் பெண்கள் அதிகம் ஈடுபடாத புதிய தொழிலான மாணவர்களுக்கான கையேடுகளை பதிப்பித்து, அதன் மூலம் தானும் லாபமடைந்து மாணவ சமுதாயத்திற்கும் பயனளிக்கும் வகையில் வெற்றிகரமான தொழில்முனைவோராகச் செயல்பட்டு வருகின்றார்.இவரது ரீயூசபில் எழுத்துப் பயிற்சிக் கையேடுகள் நல்ல  வரவேற்பைப் பெற்றுள்ளன.

உங்களைப் பற்றி சொல்லுங்கள், பதிப்பகம் ஆரம்பிக்க வேண்டியதன் அவசியம் உங்களுக்கு எப்படி தோன்றியது ?

“நான் கணினி இயல் பட்டதாரி. எனக்கு கணினியில் புத்தக வடிவமைப்பு செய்வதில் மிகுந்த ஆர்வம். பல பிரபல பதிப்பாளர்களுக்குப் பாடத்திட்டத்தை வகுத்து பல புத்தகங்களை வடிவமைத்து கொடுத்திருக்கின்றேன். மாணவர்கள் வாசிப்பதிலும் எழுதுவதிலும் சிரமப்படுகின்றனர் இதனால் மதிப்பெண்கள் பெறுவது கடினமாக உள்ளது. அதற்கென பிரத்தியேகமான புத்தகங்கள் வெளியிட விரும்பினேன். அதனால் கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளின் கல்வித்திறனை மேம்படுத்துவதற்காகச் சில பிரத்தியேக பாட புத்தகங்களை வெளியிடுவதற்காக இதற்கான முதுகலை பட்டப்படிப்பில் சேர்ந்து கற்றல் குறைபாட்டினைச் சரி செய்யும் யுக்திகளைக் கற்றதோடு மட்டுமல்லாமல் கற்றல் குறைபாடு உடைய மாணவர்களிடையே கல்வியில் முன்னேற்றத்தை செயல்முறையில் காண்பித்து முதலாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று சிறப்பு ஆசிரியை முதுகலைப் பட்டம் பெற்றேன்.”

‘‘படித்து முடித்தவுடனே உங்களுக்கான சூழல் அமைந்துவிட்டதா?”

“நான் படித்து முடித்த சில மாதங்களிலேயே கொரோனா நோய்த்தொற்று பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனால் பள்ளிகள் இயல்பாக நடைபெறாத சூழல். மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டன. இதனால் மாணவர்களின் கல்வித் தரம் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது. மாணவர்கள் அடிப்படைக் கல்வியை முறையாக கற்பது மிகவும் அவசியம். என் சிந்தனை முழுவதும் அதற்கான செயல்பாட்டில் மட்டுமே நாட்டம் கொண்டிருந்தது . அதன் விளைவே பதிப்பகத்தின் துவக்கம். உலகின் தலைசிறந்த சொல் செயல் ஒரு பெண்ணாக எண்ணங்களை செயலாக்குதல் எளிதன்று ஆனாலும் பல தடைகளையும் தாண்டி எனது விடாமுயற்சியால் நான் வெற்றி அடைந்தேன்”.

“பதிப்பகத்தில் என்னென்ன புதுமைகளை நீங்கள் செய்தீர்கள்?” .

“அடிப்படை எழுத்துக்களை எளிதில் கற்றறிந்திட பலமுறை எழுதிப் பழகக்கூடிய ரீயூசபில் புத்தகங்களைத் தமிழ், ஆங்கிலம், கணிதம் மற்றும் ஹிந்தியில் அறிமுகப்படுத்தினோம். எங்களது புத்தகங்கள் மாணவர்களின் கற்றலை எளிமையாக மாற்றியதால் பெரிதும் வரவேற்பை பெற்றன. பெற்றோர்கள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எங்களது புத்தகங்களை பயன்படுத்திய பின் வழங்கிய பின்னூட்டங்கள் எங்களை மேலும் ஊக்கப்படுத்தியது. தமிழ், ஆங்கிலம், ஹிந்தி மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளிலும் புத்தகங்களை வெளியிடுவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றோம். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பல மாநிலங்களுக்கும் எங்களது புத்தகங்களை அஞ்சல் வழியாகக் கொண்டு சேர்த்துள்ளோம்.”

“புத்தகங்களை பிரபலப்படுத்த வேறு என்னென்னவெல்லாம் நீங்கள் செய்தீர்கள்?”

“2021 முதல் தொடர்ச்சியாக கடந்த நான்கு ஆண்டுகளாக சென்னை புத்தகக் கண்காட்சியில் எங்களது புத்தகங்களும் இடம்பெற்றன. பல பிரபலங்களை சந்திக்கும் வாய்ப்புகளும் கிட்டியது. எங்களது புத்தகங்களை வாங்கி பாராட்டுக்களை தெரிவித்தனர். முகநூல் மற்றும் சமூக வலைதளங்கள் வாயிலாக எங்களது புத்தகங்களைப் பற்றி அறிந்தோர், நேரில் வந்து புத்தகங்களை வாங்கிச் செல்வது மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. சென்னை புத்தகக் கண்காட்சியில் புத்தகம் வாங்கிய ஒருவர் சென்னையில் உள்ள பிரபல தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் வாயிலாகத் தமிழ் ஆங்கிலம், கணிதம் ஆகிய புத்தகங்களை தேர்ந்தெடுத்து ஒவ்வொன்றிலும் 2000 புத்தகங்களை மிகவும் குறைந்த விலையில் நம் தமிழ் சொந்தங்களான இலங்கை தமிழர்கள் வாழும் முகாமில் உள்ள குழந்தைகள் பயிலும்
குழந்தைகளுக்கு வழங்கினார்.இது போன்ற நிகழ்வுகள் எங்களுக்கு மிகுந்த மனநிறைவு அளித்தது”

உங்களது வாடிக்கையாளர்களை எங்கிருந்து எல்லாம் நீங்கள் கண்டுபிடிக்கின்றீர்கள்?”

“ ஒரு சில வாடிக்கையாளர்கள் தாங்கள் கல்வி பயின்ற அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு எங்களது புத்தகங்களை வாங்கி அன்பளிப்பாக வழங்கினர்.ஒருசிலர் குழந்தைகளுக்குப் பிறந்தநாள் பரிசாகவும், பிறந்தநாள் விழாவிற்கு வரும் குழந்தைகளுக்கு அன்பளிப்பாகவும் எங்களது புத்தகங்களை தேர்ந்தெடுத்து பரிசளித்தனர். இவை எல்லாம் எங்களது விற்பனையையும் அதிகமாக்கியது.”

“மாணவர்களுடைய இப்போதைய நிலை குறித்து என்ன நினைக்கின்றீர்கள்?”

“இப்போது மாணவர்கள் இடையே கற்றல் குறைபாடு பரவலாக காணப்படுகிறது இதற்கு முக்கிய காரணமாக கொரோனா நோய்த் தொற்று காலகட்டத்தில் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல இயலாத காரணத்தால் ஆன்லைன் வகுப்பினால் ஆசிரியர்களின் அன்பும் அரவணைப்பும் போதிய கவனிப்பும் கிடைக்கப் பெறாத காரணத்தால் மாணவர்களின் கற்றலில் பின்னடைவு ஏற்பட்டது. அந்த இரண்டு ஆண்டுகால இடைவெளியை இன்றளவும் நிறைய குழந்தைகளிலே அவ்வளவு எளிதாக நிரப்ப இயலவில்லை. இது மிகுந்த மன வருத்தத்தை அளிக்கிறது. மாணவர்களின் கவனச் சிதறல்களுக்கு இன்றைய ஸ்மார்ட் போன் கலாச்சாரம் மற்றும் அளவுக்கதிகமான டிவி சேனல்கள் மற்றும் பொழுதுபோக்குக் சாதனங்கள் போன்றவை முக்கிய காரணிகளாக அமைகின்றன ஆகவே மாணவர்களிடையே மொபைல் லேப்டாப் போன்றவை படிப்பில் கவனம் செலுத்த விடாமல் கவனத்தைச் சிதறடிக்கின்றன.”

“மாணவர்களின் கற்றல் மேம்பாட்டிற்குத் தாங்கள் கூறும் ஆலோசனைகள் என்ன?”

“ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களின் அடிப்படைக் கல்வியில் முறையாக கவனம் செலுத்தினால் பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெறலாம். ஆகவே மாணவர்கள் மொபைல் கம்ப்யூட்டர் கேம் போன்றவற்றை தவிர்த்து யோகா உடற்பயிற்சி விளையாட்டு போன்றவற்றில் கவனத்தைச் செலுத்துவது சிறந்தது. குழந்தைகளின் நினைவாற்றல், கவனிக்கும் திறம் வாசிக்கும் திறன் எழுதும் திறன் போன்றவற்றில் கவனம் செலுத்தி அதற்கான பயிற்சிகளை மேற்கொண்டால் நிச்சயம் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தலாம்”.

“ மாணவர்களின் கற்றல் எப்படி இருக்க வேண்டும்?”

“ஒவ்வொரு மொழியிலும் எழுத்துகளுக்கான வரிவடிவம் மற்றும் ஒலி வடிவத்தை முறையாகக் கற்றல் மிகவும் அவசியம். ஒலி வடிவம் என்பது எழுத்தின் உச்சரிப்பை முறையாக அறிதல். எழுத்தில் வரி வடிவம் என்பது எழுத்துக்களை எழுதும் முறை. இரண்டையும் முறையாகப் பயின்றால் எழுதும் வாசிக்கும் திறனை மேம்படுத்த இயலும். மொழியின் அடிப்படை எழுத்துக்களை முறையாக கற்பதால் வேகமாக வாசிக்கவும் எழுதவும் முடியும். அதேபோல் கணிதத்தில் எண்களின் வடிவத்தை மட்டும் கற்றிடாமல் மதிப்பை அறிந்து கற்றல் அவசியம்.”

“கற்றலில் பெற்றோரின் பங்கு எப்படி இருக்க வேண்டும் என்று கருதுகின்றீர்கள்?”

“மாணவர்கள் மகிழ்வுடன் கற்கும் சூழலையும் அதற்கான சாத்தியக்கூறு களையும் ஏற்படுத்துதல். நம்பிக்கை வார்த்தைகள் அளித்தல். ஊக்கப்படுத்துதல் நினைவாற்றலை மேம்படுத்துதல். அதற்குண்டான பயிற்சிகளை மேற்கொள்ளுதல். கவனிக்கும் திறனை மேம்படுத்துதல். ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கங்கள். முறையான உறக்கம் அடிப்படை எழுத்துகள் மற்றும் எண்களை முறையாகக் கற்றல் வாசித்தல் மற்றும் எழுதும் திறனை மேம்படுத்துதல் இவை எல்லாவற்றிற்கும் மேலாக குழந்தைகளின் உடல்நலம் மற்றும் மனநலத்தை காத்தல் அவசியம். மாணவர்கள் தங்கள் பிரச்னைகளை பெற்றோர் மற்றும் ஆசிரியரிடம் மனம் விட்டு பேசும் வகையில் பெற்றோர் ஆசிரியர் அணுகுமுறை இருத்தல் நன்று பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் சந்திப்பின்போது மாணவரின் குறைகளை பட்டியலிடுவதை விட அவற்றை எவ்வாறு சரி செய்ய இயலும் என்று யோசித்தால் நல்ல முன்னேற்றம் கிட்டும்”

“உங்களுக்கு கிடைத்துள்ள விருதுகள் மற்றும் உங்கள் எதிர்காலத்திட்டங்கள் குறித்து சொல்லுங்கள்?”

“555 பெண் தொழில்முனைவோர்கள் தொடர்ச்சியாகப் பங்குபெற்ற 555 கிளப் என்னும் வோர்ல்ட் ரெக்கார்ட் நிகழ்ச்சியில் நானும் பங்குபெற்று சிறந்த பெண் தொழில்முனைவோர் எனும் விருதினைப் பெற்றேன். இது என் உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரம் தற்போது ஆங்கிலத்தில் வேகமாக வாசிக்க ஈசி ஃபோனிக்ஸ் எனும் புத்தகத்தை வெளியிட்டுள்ளோம். அது போல நம் தாய்மொழியாம் தமிழ் மொழியைப் பிழையறக் கற்க தமிழ் ஃபோனிக்ஸ் எனும் புத்தகத்தை வெளியிடுவது என் அடுத்த இலக்காகும். மேலும் தென்னிந்திய மொழிகளிலும் அடிப்படை எழுத்துப் பயிற்சி புத்தகங்களை வெளியிடுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்.
– கீழை அ.கதிர்வேல்

The post பதிப்பகத்துறையில் தடம் பதிக்கும் சாதனைப் பெண்மணி! appeared first on Dinakaran.

Read Entire Article