பண்ருட்டி அருகே முதலாம் குலோத்துங்க சோழனின் கல்வெட்டு கண்டெடுப்பு

1 week ago 6

பண்ருட்டி : பண்ருட்டி வட்டம் அவியனூரில் உள்ள அர்த்த மூர்த்திஸ்வரசுவாமி கோயிலில் சுற்றுச்சுவர் எழுப்புவதற்காக கோயில் வளாகத்தில் பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் எடுத்தபோது சுமார் மூன்றரை அடி ஆழத்தில் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது. தகவல் அறிந்த விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லூரி வரலாற்று துறை பேராசிரியர்கள் ரமேஷ், ரங்கநாதன் மற்றும் ஆய்வாளர் இம்மானுவேல் ஆகியோர் வந்து ஆய்வு செய்தனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில், அவியனூரில் கண்டெடுத்த பலகை கல் 124 செ.மீ நீளமும், 46 செ.மீ அகலமும் கொண்டது. இப்பலகை கல்லில் மொத்தம் 8 வரிகள் கல்வெட்டு காணப்படுகிறது. ராசேந்திரசோழன் என்ற இயற்பெயர் உடைய முதலாம் குலோத்துங்க சோழனின் கல்வெட்டு காணப்படுகிறது.

இவ்வூரை சேர்ந்த பிராமணனின் மனைவி, பிராமணி பொன்னங்கைச்சானி என்பவர் இக்கோயிலில் விளக்கு எரிக்க ஒன்பது காசுகள் கொடுத்துள்ளதாக கல்வெட்டு கூறுகிறது. முதலாம் குலோத்துங்கன் 1070 முதல் 1120 வரை ஆட்சி புரிந்தார். அவியனூரில் கண்டெடுத்த முதலாம் குலோத்துங்க சோழனின் கல்வெட்டில் மெய்கீர்த்தி, சாமி பெயர் மற்றும் தானம் குறித்த செய்திகள் காணப்படுகிறது. இதன் மூலம் சோழர் காலத்தில் இருந்தே அவியனூர் பழமையான வரலாற்றை கொண்டது என தெரிய வருகிறது, என்றனர்.

The post பண்ருட்டி அருகே முதலாம் குலோத்துங்க சோழனின் கல்வெட்டு கண்டெடுப்பு appeared first on Dinakaran.

Read Entire Article