நொடிக்கு 6.9 அடி வேகத்தில் அசுர நடை மெஸ்சியை மிஞ்சிய எந்திரன் அமெரிக்க விஞ்ஞானிகள் தீவிரம்: 2050 உலக கோப்பையில் களமிறக்க திட்டம்

1 month ago 4

லாஸ்ஏஞ்சல்ஸ்: கடந்த 2022ல் நடந்த பிபா உலக கோப்பை கால்பந்து விளையாட்டு இறுதிப் போட்டியில் வென்ற அர்ஜென்டினா அணியின் கேப்டன் லியோனல் மெஸ்சி (37). உலகின் தலை சிறந்த கால் பந்து விளையாட்டு வீரராக கருதப்படும் இவர், பிரான்ஸ் பத்திரிகையான பிரான்ஸ் புட்பால், 1956 முதல் வழங்கி வரும் கவுரவமிக்க பாலன்டீஆர் விருதை 8 முறை வென்று சாதனை படைத்தவர். மைதானத்தில் களமிறங்கினால் மெஸ்சியின் கால்கள் மந்திரக் கோலாய் மாறி பெரும்பாலான நேரம் பந்தை கட்டுக்குள் வைத்திருப்பதை கண்டு ரசிகர்கள் மெய் சிலிர்ப்பர். மெஸ்சியின் அபாரமான ஆட்டத்தை பார்த்து வியந்து போன, அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள், அவரை விட சிறப்பாக செயல்படும் ரோபோவை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாம் உருவாக்கி வரும் ரோபோவுக்கு ‘கால்பந்தில் மெஸ்சியை மிஞ்சும் ரோபோ’ அல்லது ஆர்டெமிஸ் என பெயரிட்டுள்ளனர்.

மெஸ்சியுடன் தொடர்புபடுத்தி இந்த ரோபோ உருவாகி வருவதால், இந்த ரோபோ கால்பந்தாட்ட ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்துள்ளது. பரிசோதனைக் கூடத்தில் ஆர்டெமிசை விஞ்ஞானிகள் சோதித்தபோது, நொடிக்கு 2.1 மீட்டர் (6.9 அடி) வேகத்தில் நடப்பதை பார்த்து வியந்தனர். இதுவரை உருவான ரோபோக்களில் அதிவிரைவாக நடக்கக் கூடிய ரோபோ இதுவாகத்தான் இருக்கும் என அவர்கள் கூறினர். கால்பந்தாட்ட மைதானத்தில் இந்த ரோபோ அசுர வேகத்தில் ஓடும் வல்லமை உடையது என விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இத்துடன் நிறுத்திக் கொள்ளாமல், வரும் 2050ல், உலகக் கோப்பை கால்பந்தாட்ட போட்டியில் ஆர்டெமிசை பங்கேற்கச் செய்யும் முனைப்புடன் செயல்பட்டு வருவதாக விஞ்ஞானிகள் கூறினர்.

 

The post நொடிக்கு 6.9 அடி வேகத்தில் அசுர நடை மெஸ்சியை மிஞ்சிய எந்திரன் அமெரிக்க விஞ்ஞானிகள் தீவிரம்: 2050 உலக கோப்பையில் களமிறக்க திட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article