நீர் வரத்து அதிகரிப்பு: கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகளுக்கு தடை

1 month ago 6

கோபி: நீர்வரத்து அதிகரித்து வருவதால், கோபி அருகே உள்ள கொடிவேரி அணை மூடப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கொடிவேரி அணையானது சுமார் 700 ஆண்டுகளுக்கு முன் பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணையாகும். சுமார் 15 அடி உயரத்தில் இருந்து அருவி போல் தண்ணீர் கொட்டுவதாலும், பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பாக குளிக்க முடியும் என்பதாலும், ஒவ்வொரு அரசு விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வருகை தருவது வழக்கம். இந்நிலையில் பவானி ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருவது காரணமாக பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் கொடிவேரி அணை பகுதியில் பவானி ஆற்றில் இன்று காலை முதல் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இன்று காலை பவானி ஆற்றில் நீர் வரத்து 100 கன அடியாக இருந்த நிலையில், தற்போது 690 கனஅடியாக அதிகரித்து உள்ளது. தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்து வருவதாலும், பாதுகாப்பு கம்பிகளை தாண்டி தண்ணீர் வெளியேறி வருவதலும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி அணை மூடப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இன்று முதல் நாளை வரை 2 நாட்களுக்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பவானி ஆற்றில் துணி துவைத்தல், கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்லவும், பரிசல் இயக்கவும் அதிகாரிகள் தடை விதித்து உள்ளனர். சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டதால் கொடிவேரி அணை வெறிச்சோடி காணப்பட்டது.

The post நீர் வரத்து அதிகரிப்பு: கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகளுக்கு தடை appeared first on Dinakaran.

Read Entire Article