சென்னை,
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வைக் கண்டிப்பாக ரத்து செய்வோம் என்று பிரசாரம் செய்த தற்போதைய ஆட்சியாளர்கள், இப்போது, நீட் தேர்வை ரத்துசெய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளது எனக்கூறி மக்களை ஏமாற்றி வருவதாக த.வெ.க. தலைவர் விஜய் விமர்சனம் செய்திருந்தார்.
விஜய்யின் இந்த விமர்சனத்துக்கு அமைச்சர் சிவசங்கர் பதிலடி கொடுத்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், இது தொடர்பாக கூறியதாவது;
"நீட் தேர்வு ரத்து என்பது நீண்ட நெடிய போராட்டம். இது தமிழக மக்களுக்கும் தெரியும். கலைஞர் ஆட்சிக்காலத்திலும், ஜெயலலிதா ஆட்சிக்காலத்திலும் நீட் தேர்வு தடுத்து நிறுத்தப்பட்டது. அதன் பின்னர், ஓபிஎஸ், இபிஎஸ் ஆட்சி காலத்தில் தான் நீட் தேர்வு நடைமுறைக்கு வந்தது. நீட் தேர்வை எதிர்த்து திமுக தொடர்ந்து போராடிக்கொண்டு வருகிறது.
நீட் ரத்து என்பது மத்திய அரசை எதிர்த்து நடக்கும் போராட்டம். நீட் தேர்வை மத்திய அரசுதான் ரத்துசெய்ய முடியும். சட்டம், நாட்டின் நடைமுறை, அரசின் நடைமுறை புரிந்தால்தான் இதுகுறித்து பேசமுடியும். சினிமாவில் யாரோ எழுதிக்கொடுத்து பேசப்படும் பஞ்ச் வசனத்தை பேசும் சூழல் கிடையாது."
இவ்வாறு அவர் கூறினார்.