சென்னை,
தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
"தமிழ்நாட்டின் கடன் சுமை குறைக்கப்படும். தமிழ்நாடு அரசு பொதுத்துறை நிறுவனங்கள் சீரமைக்கப்படும்" என்ற வாக்குறுதிகள் தி.மு.க. அரசால் அளிக்கப்பட்டன. இவற்றிற்காக முறையே உயர் நிலைக் குழு மற்றும் உயர் நிலை வல்லுநர் குழு ஆகியவை அமைக்கப்படும் என்ற வாக்குறுதியும் அளிக்கப்பட்டது. மேற்படி இரண்டு குழுக்களில், உயர் நிலைக் குழு அமைக்கப்பட்டதே தவிர, அது எத்தனை முறை கூடியது, என்ன ஆலோசனைகள் வழங்கப்பட்டன. அதனால் என்ன பயன் என்பது குறித்து எவ்விதமான தகவலும் இல்லை. பொதுத்துறை நிறுவனங்களை சீரமைப்பதற்கான உயர் நிலை வல்லுநர் குழு அமைக்கப்பட்டதாகத் தெரியவில்லை. தி.மு.க. ஆட்சி அமைக்கப்பட்டு 43 மாதங்கள் கடந்த நிலையில், தமிழ்நாட்டின் நிதி நிலைமை அதலபாதாளத்திற்கு சென்று விட்டதாகவும், பொதுத்துறை நிறுவனங்களும் தொடர்ந்து பெரும் இழப்பை சந்தித்து வருவதாகவும் இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர் தெரிவித்து இருக்கிறார். இதுதான் தி.மு.க. அரசின் மூன்றரை ஆண்டு கால ஆட்சியின் சாதனை!
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 10-12-2024 அன்று வைக்கப்பட்ட 2022-2023ம் நிதியாண்டிற்கான தணிக்கை அறிக்கையில், 2018-2019ம் நிதியாண்டில் 23,459 கோடி ரூபாயாக இருந்த தமிழ்நாட்டின் வருவாய் பற்றாக்குறை 2022-2023-ல் 36,215 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என்றும், 2022-2023ம் ஆண்டில் 39,530 கோடி ரூபாய் மட்டுமே மூலதனக் கணக்கில் செலவிடப்பட்டுள்ளதாகவும், இது மொத்த செலவினத்தில் 12.1 விழுக்காடு என்றும், கடன் மூலம் பெறப்பட்ட நிதியில் 39 சதவீதம் மட்டுமே மூலதனச் செலவிற்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், கடன் மூலம் பெறப்பட்ட நிதி தற்போதைய செலவுகளுக்கும், வாங்கிய கடனை திருப்பி செலுத்துவதற்கும் செலவழிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று, 2018-2019ம் நிதியாண்டில் 47,335 கோடியாக இருந்த நிதிப் பற்றாக்குறை என்பது 2022-2023-ல் 81,886 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் மொத்தக் கடன் 8,33,362 கோடி ரூபாயாகும்.
செலவினத்தை கட்டுப்படுத்த நிறைய முயற்சிகளை மாநில அரசு எடுக்க வேண்டுமென்றும், தேவையற்ற செலவினங்களை தவிர்க்க வேண்டுமென்றும், வருவாய் செலவினம் கட்டுப்படுத்தப்பட்டு வருவாய் பற்றாக்குறை குறைக்கப்பட வேண்டுமென்றும், இதனை மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்குள் திட்டமிட்டு செயல்படுத்த வேண்டுமென்றும் இந்திய தலைமை தணிக்கை அதிகாரி கூறி இருக்கிறார். மேலும், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் குடிநீர் வழங்கல் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறைகளுக்கான ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேற்பட்ட தொகை செலவழிக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டின் நிதி நிலைமை இந்த நிலைமையில் இருக்கிறது என்றால், பொதுத்துறை நிறுவனங்களின் நிதி நிலைமை இதைவிட மோசமாக உள்ளது. முப்பதிற்கும் மேற்பட்ட பொதுத் துறை நிறுவனங்கள் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருப்பதாகவும், இதில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் முதலிடத்தில் வகிப்பதாகவும், இவற்றின் தொடர் இழப்பு ஒரு லட்சத்து 83 ஆயிரம் கோடி ரூபாய் என்றும், 2021-2022-ல் மட்டும் 22,192 கோடி ரூபாய் என்றும், இவற்றில் 15,357 கோடி ரூபாய் நஷ்டம் என்பது எரிசக்தி துறையில் மட்டும் ஏற்பட்டுள்ளது என்றும் தணிக்கை அறிக்கை தெரிவிக்கிறது. 2018-2019 ஆம் ஆண்டில் 24,718 கோடி ரூபாயாக இருந்த தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் தொடர் இழப்பு என்பது 2022-ல் 48,478 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
சொத்து வரி, குடிநீர் வரி, மின் கட்டணம், வாகன வரி, முத்திரைக் கட்டணம், பதிவுக் கட்டணம் என மாநில அரசின் வரம்புக்குள் வரும் அத்தனை வரிகளையும் உயர்த்தி ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் பொதுமக்கள்மீது நிதிச் சுமையை சுமத்தியும், தமிழ்நாட்டின் நிதி நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. மின்சார வாரியம், போக்குவரத்துக் கழகங்கள் ஆகியவை அதலபாதாளத்தில் சென்றிருக்கின்றன என்றால், இதற்குக் காரணம் திறமையற்ற ஆட்சி, செயல்படாத ஆட்சி, ஊழலாட்சி தமிழ்நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்றுதான் பொருள். தமிழக வரலாற்றிலேயே இதுபோன்ற மோசமான ஆட்சியை பார்த்ததேயில்லை என்று மக்கள் சொல்லும் அளவுக்கு நிலைமை மோசமாகிவிட்டது. சட்டம் - ஒழுங்கு சீரழிவு, நீர் மேலாண்மை சீரழிவு என்ற வரிசையில் நிதி மேலாண்மையும் சீரழிந்து கொண்டிருக்கிறது. இந்த நிலைமை மாற ஒரே வழி ஆட்சி மாற்றம்தான்.
ஆட்சியினால் ஏற்படும் நன்மை, தீமைகளை நாள்தோறும் ஆராய்ந்து அதற்கேற்ப செயல்படாதவர் கொஞ்சம், கொஞ்சமாக தன் நாட்டை இழப்பார் என்ற வள்ளுவரின் வாய்மொழிக்கேற்ப, தி.மு.க ஆட்சி அகற்றப்பட்டு, ஜெயலலிதா வகுத்துக் கொடுத்த ஆட்சி மீண்டும் மலரும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்பதை அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.