நியூசிலாந்து முதல் அமெரிக்கன் சாமோ வரை கொண்டாட்டம், வாணவேடிக்கையுடன் புத்தாண்டை வரவேற்ற உலக நாடுகள்: வழிபாட்டுத்தலங்களில் சிறப்பு பிரார்த்தனை

2 days ago 2

நியூயார்க்: நியூசிலாந்து முதல் அமெரிக்கன் சாமோ வரையிலும் உலக நாடுகள் அனைத்தும் கொண்டாட்டம், கேளிக்கை, வாணவேடிக்கைகளுடன் 2025 புத்தாண்டை வரவேற்று மகிழ்ந்தன. வழிபாட்டுத் தலங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டன. உலகின் அத்தனை நாடுகளும் 2024ம் ஆண்டுக்கு விடைகொடுத்து, 2025 புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளன. நேர வேறுபாட்டால் ஒவ்வொரு நாடுகளும் புத்தாண்டை வரவேற்ற நேரம் மாறுபட்டாலும், அதன் கொண்டாட்டங்கள் மாறவில்லை.

உலகில் முதல் நாடாக இந்திய நேரப்படி நேற்று முன்தினம் மாலை 4.30 மணி அளவில் தென் பசிபிக் பெருங்கடலில் உள்ள சாமோ உள்ளிட்ட நாடுகள் புத்தாண்டை வரவேற்றன. அதைத் தொடர்ந்து முதல் பெரிய நகரமாக நியூசிலாந்தின் ஆக்லாந்தில் வாணவேடிக்கைகளுடன் 2025 புத்தாண்டு பிறந்தது. அங்குள் டவுன்டவுனில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்து புத்தாண்டை வரவேற்றனர். நியூசிலாந்தை தொடர்ந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி துறைமுக பாலத்தில் கண்கவர் வாணவேடிக்கையுடன் மக்கள் புத்தாண்டை கொண்டாடினர்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரின் பிரசித்தி பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்து புத்தாண்டை வரவேற்றனர். லாஸ்வேகாஸ், கலிபோர்னியா உள்ளிட்ட அனைத்து மாகாணங்களிலும் இசை நிகழ்ச்சிகள், வண்ண ஒளி காட்சிகளுடன் புத்தாண்டு கொண்டாடப்பட்டது. இந்தோனேசியாவின் பாலியில் சூரியனை வரவேற்று பாரம்பரிய நடனத்துடன் புத்தாண்டு வரவேற்கப்பட்டது.  ஜப்பானில் புத்தாண்டு தினம் தேசிய விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டு கோயில்கள், வீடுகள் சுத்தம் செய்யும் பணியில் ஜப்பானியர்கள் ஈடுபட்டனர்.

சீனாவில் சாங்கிங் நகரின் ஜிபாங்பே நினைவுச்சின்னம் அமைந்துள்ள பகுதியில் லட்சக்கணக்கானோர் குவிந்து ஆட்டம் பாட்டத்துடன் புத்தாண்டை வரவேற்றனர். புத்தாண்டை வரவேற்கும் விதமாக துபாயின் புகழ்பெற்ற புர்ஜ் கலிபா கட்டிடம், தைவானின் தைபேயில் உள்ள 101 கோபுரம் ஆகியவற்றில் கண்கவர் வாண வேடிக்கைகள் நடத்தப்பட்டன. சிரியாவில் பல ஆண்டுகள் நீடித்த ஆசாத் குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டிய பிறகு கொண்டாடப்படும் முதல் புத்தாண்டை அந்நாட்டு மக்கள் கூடுதல் சந்தோஷத்துடன் கொண்டாடினர்.

இலங்கையில் புத்த கோயில்களில் எண்ணெய் விளக்குகள் ஏற்றி வழிபாடுகளுடன் புத்தாண்டு வரவேற்கப்பட்டது. இத்தாலியின் ரோம் நகரில் உள்ள பிரான்சிஸ் செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் சிறப்பு பிரார்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டன. இங்கிலாந்தின் லண்டனில் தேம்ஸ் நதிக்கரையில் புத்தாண்டு வாணவேடிக்கைகள் அசத்தின. சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் உறைபனியிலும் புத்தாண்டை மக்கள் கொண்டாட்டங்களுடன் வரவேற்றனர். இறுதியாக உலகின் கடைசி நாடாக அமெரிக்கன் சாமோவில் இந்திய நேரப்படி நேற்று மாலை 4.30 மணிக்கு புத்தாண்டு பிறந்தது.

* களையிழந்த நாடுகள்
புத்தாண்டிலும் மத்திய கிழக்கு நாடுகளில் குண்டுசத்தங்கள் ஓயவில்லை. புத்தாண்டு தினத்திலும் காசா மீது இஸ்ரேல் குண்டுவீசி பலரை கொன்றது. ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இதன் காரணமாக அங்கு புத்தாண்டு கொண்டாட்டங்கள் களையிழந்து காணப்பட்டன. உக்ரைனிலும் புத்தாண்டு தினத்தில் ரஷ்யா 111 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியது. தென் கொரியாவில் சமீபத்தில் முலான் நகரில் நடந்த விமான விபத்தில் 179 பேர் இறந்த நிலையில் அந்நாட்டில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் மந்தமாகவே இருந்தன.

The post நியூசிலாந்து முதல் அமெரிக்கன் சாமோ வரை கொண்டாட்டம், வாணவேடிக்கையுடன் புத்தாண்டை வரவேற்ற உலக நாடுகள்: வழிபாட்டுத்தலங்களில் சிறப்பு பிரார்த்தனை appeared first on Dinakaran.

Read Entire Article