சென்னை,
கோவையில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வருகிறார். கோவை விமான நிலையத்தில் அவருக்கு கட்சி நிர்வாகிகள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.
பின்னர் அவர் கோவை விளாங்குறிச்சி ஐ.டி. வளாகத்தில் கட்டப்பட்டு உள்ள புதிய தகவல் தொழில்நுட்ப பூங்கா கட்டி டத்தை திறந்து வைக்கிறார். இதையடுத்து அரசு அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தங்க நகை தொழிலாளர்களை சந்தித்து பேசுகிறார்.
நாளை மறுநாள் (6-ந் தேதி) காலை 9 மணிக்கு செம்மொழி பூங்காவில் நடந்து வரும் பணிகளை ஆய்வு செய்யும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தொடர்ந்து கோவை மத்திய சிறை மைதானத்தில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் மற்றும் அறிவியல் மையத்துக்கு அடிக்கல் நாட்டு கிறார். 2 நாட்கள் கோவையில் இருக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கோவை மாவட்டத்தில் செய்யப்பட்டு உள்ள பணிகள், செய்ய வேண்டிய பணிகள் குறித்து அரசு அதிகாரிகளுடன் ஆய்வு செய்வதுடன், கட்சி நிர்வாகிகள் கூட்டத்திலும் அவர் பங்கேற்பதாக கூறப்படுகிறது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை வருவதையொட்டி நிகழ்ச்சிகளுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருவதையொட்டி கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.