சென்னை: நான்காவது “அயலகத் தமிழர் தினம் 2025” வருகிற “ஜனவரி மாதம் 11 மற்றும் 12” ஆகிய தேதிகளில் “எத்திசையும் தமிழணங்கே” என்ற கருப்பொருளில் நடைபெற உள்ளதால், அது குறித்து கலந்தாய்வுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தலைமையில் நடைபெற்றது.
2025 அயலகத் தமிழர் தின விழாவில் கலாச்சாரம். பொருளாதாரம். கல்வி மற்றும் திறன் மேம்பாடு போன்ற துறைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு, தொழில்முனைவு, வளர்ச்சி மற்றும் முதலீட்டு வாய்ப்புகள், மருத்துவ சுற்றுலா, கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள், வெளிநாட்டில் தமிழ்மொழி கற்பிப்பது மற்றும் அயல்நாடுகளில் தமிழ் ஊடகம் போன்ற தலைப்புகளின் அமர்வுகள் அமைச்சர்கள் மற்றும் மதிப்பிற்குரிய அயலகத் தமிழர்கள் முன்னிலையில் நடத்தப்படும்.
கல்லூரி மாணவர்களுக்காக பிரத்யேகமாக மின்வாகன தொழில்நுட்பம், வங்கி மற்றும் நிதி சார்ந்த தொழில்நுட்பம், குவாண்டம் கம்ப்யூட்டிங் (Quantum Computing), உயிரி தொழில்நுட்பம் மற்றும் வெளிநாடுகளில் இருக்கும் வேலைவாய்ப்புகளைப் பற்றி அங்குள்ள தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்த துறைசார் வல்லுநர்கள் விரிவாக உரையாற்ற உள்ளனர்.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் (TNSDC) நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு ஆய்வு மற்றும் மேம்பாடு (R&D) திறன்களை ஊக்குவிப்பதற்காக உலகெங்கிலும் உள்ள துறைசார் வல்லுநர்களை வழிகாட்டியாக அமைக்கும் பணிகளில் அயலகத் தமிழர் நலத்துறை ஈடுபட்டுள்ளது. இதுகுறித்து இவ்விழாவில் ஒரு கலந்துரையாடல் நிகழ்வு நடத்தப்படவுள்ளது. அயலகத் தமிழர் நலத்துறையின் இந்த பிரிவு பேராசிரியர்கள் பரிமாற்றம், பண்பாட்டு பரிமாற்றத் திட்டங்கள். இணை ஆய்வு முயற்சிகள் மற்றும் பிற செயல்பாடுகளில் தமிழக மாணவர்கள். ஆய்வாளர்கள் ஈடுபட உறுதுணையாக இருக்கும்.
மேலும் Southern India Chamber of Commerce and Industry (SICCI) உடன் இணைந்து, பல்வேறு நாடுகளில் அங்குள்ள தமிழ் சங்கங்கள் மற்றும் தொழில் அமைப்புகளுடன் இணைந்து ‘ஒருங்கிணைப்பு மையங்கள் (Country desk) அமைக்கப்பட உள்ளது. இவை தொழில், கல்வி, சுற்றுலா மற்றும் முதலீடு உள்ளிட்ட துறைகளின் ஒத்துழைப்புக்கு முன்னோடியாக செயல்படும்.
வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்களின் பரிந்துரையின் அடிப்படையில், இரு நாள் நிகழ்வின் போது பொருளாதார தொடர்புகளை न (Reverse Buyer-Seller Meet RBSM) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSME) துறையின் FaMe TN முகமை மற்றும் இந்திய ஏற்றுமதி அமைப்புகளின் கூட்டமைப்புடன் (FIEO) இணைந்து நடத்தப்படுகிறது. இது உலகளாவிய வாங்குபவர்கள் மற்றும் ஒத்துழைப்பாளர்களுடன் தமிழக தொழில்முனைவோர்களை ஒருங்கிணைத்து, இறக்குமதி ஒப்பந்தங்களை ஊக்குவித்து, நீடித்த மற்றும் நிலையான வாய்ப்புகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களாக மாற வழிவகுக்கும்.
இந்த நிகழ்வின் முக்கிய சிறப்பம்சமாக, தமிழ் புலம்பெயர் சமூகத்தைச் சேர்ந்த சாதனையாளர்களை அங்கீகரிக்கும் விதமாக, 8 பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட உள்ளன. அவற்றில் கனியன் பூங்குன்றனார் விருதுகள் (வணிகம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், பெண்கள், கல்வி, சமூக மேம்பாடு மற்றும் மருத்துவம் ஆகியவற்றில் பங்களிப்புகளுக்கானது). மேலும், முதல் முறையாக. அயலகச்சூழலில் தலைசிறந்து விளங்கும் தமிழருக்கு ‘தமிழ் மாமணி’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அயலகத் தமிழர் நலத்துறையின் ‘வேர்களைத் தேடி’ திட்டத்தின் பங்கேற்பாளர்கள் பண்பாட்டுத் தூதுவர்’ என்று சிறப்பிக்கப்படுகின்றனர். அவர்களில் ஒருவரை தேர்ந்தெடுத்து ‘சிறந்த பண்பாட்டுத் தூதுவர்’ என்று விருதளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வுக்கென தனிப்பட்ட கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளது. குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSME). புதுப்பிப்பு நிறுவனங்கள் (Startups). சுய உதவிக் குழுக்கள் (SHG), தமிழ்ச் சங்கங்கள், வணிக சங்கங்கள் மற்றும் தமிழர் வியாபாரத்தைச் சார்ந்த பிற நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை காட்சிப்படுத்த அழைக்கப்படுகின்றன. இக்கண்காட்சி அரங்கங்களுக்கான முன்பதிவு இரண்டு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
1. தனியார் காட்சி அரங்குகள்
2. தமிழ்ச் சங்கம் அரங்குகள்
கண்காட்சி அரங்குகளுக்கான முன்பதிவு 26.12.2024 அன்று தொடங்குகிறது. அரங்கு விண்ணப்பங்கள் துறையின் ஆய்வுக்குப் பின் பங்குபெற ஒப்புதல் வழங்கப்படும். இந்நிகழ்வில் பங்கேற்பவர்கள்/கலந்து கொள்பவர்களுக்கான பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. பதிவு மற்றும் கூடுதல் விவரங்களுக்கு https://nrtamils.tn.gov.in இணையதள முகவரியை அணுகவும்.
The post நான்காவது அயலகத் தமிழர் தினம்: தலைமைச் செயலகத்தில் அமைச்சர் சா.மு.நாசர் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் appeared first on Dinakaran.