"நான் நலமாக உள்ளேன்.." - சிகிச்சை பெற்று வரும் டாக்டர் பாலாஜி

11 hours ago 2

சென்னை,

சென்னை கிண்டி அரசு பல்நோக்கு மருத்துவமனையில், புற்றுநோய் பிரிவு டாக்டர் பாலாஜியை, விக்னேஷ் என்ற இளைஞர் கத்தியால் குத்தினார். இதனால் காயமடைந்த டாக்டர் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், விக்னேஷ் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சூழலில் டாக்டரை தாக்கிய விக்னேசுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இச்சம்பவத்தை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு டாக்டர்கள் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தாலுகா மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் இப்போராட்டம் நடைபெறுகிறது. டாக்டர் பாலாஜி மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்தும், வருங்காலங்களில் இது போன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருக்க தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடத்தப்படுகிறது. மேலும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை வழியாக அளித்த வாக்குறுதிகளை அரசாணையாக வெளியிட வேண்டும் என வலியுறுத்தியும் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

இந்நிலையில் தான் நலமாக இருப்பதாக கிண்டி அரசு பல்நோக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் டாக்டர் பாலாஜி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், தனக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து கூறும் டாக்டர் பாலாஜி, தான் நலமாக இருப்பதாகவும், காலை உணவு சாப்பிட்டதாகவும் கூறுகிறார். இதையடுத்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் டாக்டர்களுக்கு அவர் நன்றி கூறுகிறார். இந்நிலையில் டாக்டர் பாலாஜி உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் தாக்குதலுக்கு உள்ளான டாக்டர் பாலாஜியை நேரில் சந்தித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நலம் விசாரித்தார். 

Read Entire Article