நாட்டுக்கோழி வளர்ப்பில் பட்டையக் கிளப்பும் பட்டதாரி!

2 hours ago 3

விவசாயம் என்றால் கிராமத்தில் உள்ள வயதானவர்கள் செய்யும் தொழில் என்ற இமேஜ் என்றைக்கோ உடைந்து விட்டது. இப்போது பட்டப்படிப்பு படித்த இளைஞர்களே விவசாயத்தில் இறங்கி அதிரடி காட்டி வருகிறார்கள். விவசாயம் மட்டுமில்லை, கால்நடை வளர்ப்பிலும் கோலோச்சுகிறார்கள். அந்த வரிசையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கே.போத்தம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மனோஜ் என்ற எம்எஸ்சி பட்டதாரி நாட்டுக்கோழி வளர்ப்பில் ஈடுபட்டு நல்ல லாபம் பார்த்து வருகிறார். திறந்த வெளி மேய்ச்சல் முறையில் இவர் வளர்க்கும் நாட்டுக்கோழிக்கு அந்தப் பகுதியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. டிஎன்பிஎஸ்சி தேர்வுக்காக தீவிரமான படிப்பு, அதனிடையே நாட்டுக்கோழி வளர்ப்பு என பிசியாக இருக்கும் மனோஜை, ஒரு காலைப் பொழுதில் சந்தித்தோம். “விவசாயக் குடும்பம். ஆடு, மாடு, கோழி என எப்போதும் எங்கள் வீட்டில் கால்நடைகள் இருக்கும். அப்போது கோழி வளர்ப்பில் ஆர்வமாக ஈடுபடுவேன். கடந்த 7 வருடங்களுக்கு முன்பு முழுமையாக நாட்டுக்கோழி வளர்ப்பில் இறங்கினேன். அதற்கொரு முக்கிய காரணம் இருக்கிறது. எங்கள் பகுதியில் தண்ணீர்ப் பற்றாக்குறை இருந்தது. இதனால் விவசாயம் பார்க்க சிரமம் ஏற்பட்டது. நாட்டுக்கோழி வளர்ப்புக்கு அவ்வளவாக தண்ணீர் தேவைப்படாது. இதனால் இந்தத் தொழிலைத் தேர்ந்தெடுத்தேன். தற்போது பிராய்லர் கோழி மீது உள்ள மோகம் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. ஆட்டுக்கறி கொலஸ்ட்ரால் மிகுந்தது என்ற கருத்து நிலவி வருகிறது. இதுபோன்ற காரணங்களால் நாட்டுக்கோழிகளுக்கு நல்ல டிமாண்ட் இருக்கிறது. நாங்கள் வளர்க்கும் கோழிகள் உடனுக்குடன் விற்றுத் தீர்ந்துவிடுகின்றன. எங்களால் போதிய அளவுக்கு நாட்டுக்கோழியை வளர்த்துக் கொடுக்க முடியவில்லை’’ என நாட்டுக்கோழியின் மார்க்கெட்டிங் பற்றிக் கூறிய மனோஜ், அவற்றை வளர்க்கும் முறைகள் குறித்தும் பகிர்ந்து கொண்டார்.

“ நாட்டுக்கோழிகளை திறந்த வெளியில் மேய்ச்சலுக்கு விட வேண்டும். அவற்றைக் கூண்டில் அடைத்து வைத்தால் பிராய்லர் கோழி போன்றுதான் இருக்கும். கோழிகள் பொதுவாக மேய்ச்சலுக்கு சென்று தமக்குத் தேவையான தீவனத்தை எடுத்துக்கொள்ளும். நாம் கொடுக்கும் கம்பு, சோளம், அரிசி போன்றவை மீதத் தீவனத் தேவையைத் தீர்க்கும். மழைக்காலங்களில் மேய்ச்சலில் நன்றாக பசியாறிவிடும். நாம் அளிக்கும் தீவனத்தின் அளவைக் குறைத்துக் கொள்ளலாம். மற்ற சமயங்களில் நாம் அளிக்கும் தீவனத்தின் அளவு அதிகமாக இருக்கும். அரிசி, கம்பு, சோளம் போன்றவற்றை அரைத்துப் போடும்போது கோழிகள் நன்றாக வளரும். வெயில் காலங்களில் தீவனத்தை அதிகப்படுத்தித் தர வேண்டும். அதேவேளையில் கோழிகளுக்கு அளவுக்கு அதிகமாகவும் தீவனம் போடக்கூடாது. கோழிகள் எவ்வளவு போட்டாலும் சாப்பிட்டுக் கொண்டே இருக்கும். அது நமது தீவனச் செலவை அதிகப்படுத்தி லாபத்தைக் குறைத்துவிடும். நாம் அளிக்கும் தீவனம் 30 சதவீதம் இருந்தாலே போதும். மேய்ச்சலுக்கு விடுகையில் தீவனத்தை அவைகளே தேடி உட்கொண்டு பசியாறிவிடும். நாட்டுக்கோழிகள் அடைகாத்து குஞ்சு பொரிப்பதுதான் நல்ல முறை. ஒரு சில நேரங்களில் இன்குபேட்டர் பயன் படுத்த வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. வெயில் காலங்களில் மட்டும் ஒரு சில நேரங்களில் இன்குபேட்டர் பயன்படுத்த வேண்டிய சூழல் இருக்கிறது. 95 சதவீதம் அடைகாத்து குஞ்சு பொரிப்பதுதான் சிறந்த முறை.
குஞ்சுகள் முட்டையில் இருந்து பொரிந்து வந்த சில நாட்களில் மண்ட வெல்லம் அல்லது கருப்பட்டி தண்ணீர் கொடுப்போம். மேலும் நுணுக்கப்பட்ட கம்பு கொடுப்போம். மழைக்காலங்களில் மஞ்சள் பொடி, சின்ன வெங்காயம், கீழாநெல்லி, சீரகம், மிளகு போன்றவற்றை அரைத்து வைப்போம். இதன்மூலம் வெள்ளைக்கழிசல் போன்ற நோய்கள் தாக்காமல் இருக்கும். நோய்கள் தாக்கி விட்டால், அந்தக் கோழிகளை தனித்தனியே பிரித்து வைப்போம். இவ்வாறு செய்வதால் மற்ற கோழிகளுக்கு நோய் பரவும் வேகம் மட்டுப்படும். அதற்குள் நாம் ஆன்டிபயாட்டிக் மருந்துகளைக் கொடுத்து விடலாம்.

தாய்க்கோழியின் எண்ணிக்கையை அதிக அளவு கூட்டாமல் சீராக வைத்திருக்க வேண்டும். குஞ்சுகளின் அளவைக் கூட்டி இனப்பெருக்கத்தை அதிகப்படுத்த வேண்டும். 5 முதல் 8 தாய்க்கோழிகள் இருந்தாலே போதும். அவற்றை வளர்த்து இனப்பெருக்கம் செய்து குஞ்சுகளின் அளவை அதிகரிக்கலாம். கோழிகளின் கழிவு விவசாயத்திற்கு நல்ல எரு. இதனை விவசாயிகளிடம் விற்று ஒரு குறிப்பிட்ட தொகையை சம்பாதிக்கலாம். ஒரு நாட்டுக்கோழி வளர்ந்து 1 கிலோ எடையை அடைய சுமார் 6 மாதம் ஆகும். 6 மாதத்திற்கு பிறகு கோழிகளை விற்பனை செய்கிறோம். அப்போது ஒவ்வொரு கோழியும் ஒரு கிலோவுக்கு மேல் இருக்கும். அந்தக் கோழிகளை சராசரியாக ரூ.550 என விற்கிறோம். ஒரு கோழியை வளர்த்தெடுக்க (தீவனச் செலவு) ரூ.200 வரை செலவாகும். இதன்மூலம் ஒரு கோழியில் இருந்து ரூ.350 வரை லாபம் கிடைக்கும். வாரத்திற்கு 15 கோழிகள் வரை விற்போம். இதன்மூலம் ரூ.5,250 லாபம் கிடைக்கும். மாதத்திற்கு ரூ.21 ஆயிரம் வரை லாபம் கிடைக்கும்’’ என்கிறார்.
தொடர்புக்கு:
மனோஜ்: 93440 07955.

 நாட்டுக்கோழிகள் என்றால் மேய வேண்டும். கூண்டில் அடைத்து தீவனமளித்து வளர்க்கக்கூடாது. அப்படி வளர்த்தால் அது பிராய்லர் கோழி போலத்தான் இருக்கும்.

 ஒரு கோழியை வளர்க்க ரூ.200 வரை செலவாகும். அதை ரூ.550க்கு விற்று ரூ.350 லாபமாக பார்க்கலாம். மாதத்திற்கு 60 கோழிகள் விற்பதன் மூலம்
ரூ.21 ஆயிரம் லாபம் கிடைக்கிறது.

 

The post நாட்டுக்கோழி வளர்ப்பில் பட்டையக் கிளப்பும் பட்டதாரி! appeared first on Dinakaran.

Read Entire Article