சென்னை,
தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் ஆர்.மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாகை மாவட்டம் நாகூரில் உலக பிரசித்தி பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. இந்த தர்காவிற்கு நாள்தோறும் வெளியூர், வெளி மாநிலம் வெளிநாடுகளில் இருந்து திரளானோர் வந்து செல்கின்றனர். இந்த தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டுக்கான கந்தூரி விழா அடுத்த மாதம் (டிசம்பர்) 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி டிசம்பர் 15-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொடி இறக்கும் நிகழ்ச்சியுடன் முடிவடைகிறது.
இதனை முன்னிட்டு சென்னை, திருச்சி, வேலூர் மதுரை, பெங்களூரு, சிதம்பரம், கும்பகோணம் மற்றும் ராமநாதபுரம் ஆகிய இடங்களில் இருந்து பொதுமக்களின் வசதிக்கேற்ப டிசம்பர் 1-ந்தேதி முதல் நாகூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. மேற்கூறிய இடங்களிலிருந்து www.tnstc.in மற்றும் செல்போன் செயலி (ஆப்) மூலம் முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.