மும்பை,
பிரபல இந்தி நடிகர் சல்மான்கானுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலால் அச்சுறுத்தல் உள்ள நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பாக ரூ.10 கோடி கேட்டு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. தாதா அன்மோல் பிஷ்னோய் பெயரில் மும்பை போலீஸ் உதவி எண்ணுக்கு இன்டெர்நெட் அழைப்பு மூலம் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது.
இதுபற்றி மும்பை பாந்திரா போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் மிரட்டல் அழைப்பு உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் இருந்து வந்தது தெரியவந்தது. உடனே மும்பை போலீசார் நொய்டா போலீசுக்கு தகவல் அளித்தனர். மேலும் தனிப்படை போலீசார் அங்கு விரைந்தனர்.
நொய்டா போலீசாருடன் மும்பை தனிப்படை போலீசார் இணைந்து நடத்திய சோதனையில், மிரட்டல் விடுத்த நபர் அங்குள்ள கட்டுமான பணி நடந்து வரும் ஒரு வீட்டில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. அவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரது பெயர் தயீப் அன்சாரி(வயது20) என்றும், தச்சு தொழிலாளியாக வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. தாதா லாரன்ஸ் பிஷ்னோய் பெயரில் மிரட்டல் விடுத்ததை அவர் ஒப்புக்கொண்டார். ரூ.10 கோடி கேட்டு மிரட்டல் விடுத்ததற்கான காரணம் என்ன? என்பது பற்றி போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.