ஐதராபாத்,
நடிகர் அல்லு அர்ஜுன் நடித்திருந்த புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சி ஐதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் 4-ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு திரையிடப்பட்டது. அப்போது, நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ரசிகர்களுடன் படம் பார்க்க சந்தியா தியேட்டருக்கு வந்திருந்தனர்.
இருவரையும் காண தியேட்டரில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. கட்டுப்படுத்த முடியாத கூட்டம் முண்டியடித்த போது ஏற்பட்ட நெரிசலில், குடும்பத்துடன் படம் பார்க்க வந்த 35 வயதான ரேவதி மற்றும் 9 வயதான அவரது மகன் ஸ்ரீதேஜா இருவரும் சிக்கி நிலைதடுமாறி கீழே விழுந்தனர். அப்போது ரசிகர்கள், இருவர் மீதும் ஏறி மிதித்ததில் படுகாயமடைந்தவர்கள், மூச்சு பேச்சின்றி சுயநினைவை இழந்தனர்.
அவர்களை மீட்டு முதலுதவி அளித்த போலீசார், ஆர்டிசி கிராஸ்ரோட்டில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். ஆனால், ரேவதி ஏற்கனவே உயிரிழந்து விட்டார். உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் இழப்பீட்டு தொகையை அல்லு அர்ஜுன் வழங்கினார்.
இந்த வழக்கில் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்ட நிலையில், பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் முன் ஐதராபாத் உஸ்மானியா பல்கலைக்கழகத்தின் மாணவர் அமைப்பினர் இன்று வன்முறையில் ஈடுபட்டனர். அவர்கள் கும்பலாக திரண்டு வந்து, பூந்தொட்டிகளை தூக்கி போட்டு உடைத்தும், கற்களை வீசியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, தகவல் அறிந்து வந்த தெலுங்கானா போலீசார், அல்லு அர்ஜுன் வீட்டின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரிடம் அல்லு அர்ஜுன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர்கள் கோஷம் எழுப்பினர்.