சென்னை,
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரின் பேரில், கோட்டூர்புரம் அனைத்து மகளிர் போலீசார் 4 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து ஞானசேகர் என்ற நபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதனிடையே, மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அ.தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தி.மு.க. அரசைக் கண்டித்து நாளை காலை 10 மணிக்கு தன்னை தானே சாட்டையால் அடித்துக்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-
"முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு, புகாரை பெற்ற 3 மணி நேரத்திற்குள் குற்றவாளியை கைது செய்துள்ளது. இதுவே உத்தர பிரதேசத்தில் ஒரு சாமியார் கூட்டிய கூட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். இதுவரை அந்த சாமியார் மீது வழக்கு கூட பதிவு செய்யப்படவில்லை.
டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகள் எத்தனை நாட்கள் போராட்டக் களத்தில் இருந்தார்கள், அவர்களின் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டதா? மணிப்பூரில் இன்னும் வன்முறை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதுவரை உலகத்தில் எங்கும் நடைபெறாத அளவிற்கு, ஈரமுள்ள இதயங்கள் புழுங்கி அழுகின்ற அளவிற்கு அங்கு ஏற்பட்ட கொடுமைகளை பார்த்திருப்பீர்கள்.
பொள்ளாச்சியில் 'அண்ணா என்னை விட்டுவிடுங்கள்' என்ற அபயக்குரல் கேட்டதையும், அங்கு நடந்த பாலியல் வன்கொடுமையையும் மக்கள் நன்றாக அறிவார்கள். அப்போது புகாரை பெறுவதற்கு கூட அந்த ஆட்சி முன்வரவில்லை. எத்தனை நாட்களுக்கு பிறகு புகாரை பெற்று, கைது நடவடிக்கை மேற்கொண்டார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.
தற்போது இந்த ஆட்சியில் நடந்துள்ள சம்பவத்திற்கு அனைவரும் வருத்தப்படுகிறோம். இருப்பினும் குற்றவாளியை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தியிருக்கிறோம். இந்த சம்பவம் மிகவும் துரதிருஷ்டவசமானது. ஆனால் அதற்கான நடவடிக்கையை அரசு உடனடியாக எட்டுக்கால் பாய்ச்சலில் எடுத்துள்ளது. மனசாட்சி உள்ளவர்களும், நடுநிலையாளர்களும் இதை பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்."
இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.