மதுரை, ஜன. 8: நகர்ப்புற உள்ளாட்சி விதிகளுக்கு எதிரான வழக்கில் அரசு செயலர்கள் பதிலளிக்குமாறு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தைச் சேர்ந்த சுந்தரவிமலநாதன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: கும்பகோணம் நகராட்சியில் 3 மாடிகளை கொண்ட வணிக வளாகம் அரசு சார்பில் கட்டப்படுகிறது. இதற்கான வாகன நிறுத்துமிடமும் கட்டப்பட உள்ளது. இதற்கான டெண்டர் அறிவிப்பு கடந்தாண்டு செப்டம்பரில் வெளியானது. இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு கடைகள் ஒதுக்கப்படவில்லை. டெபாசிட் தொகை அதிகமாக நிர்ணயிக்கப்பட்டதால் மாற்றுத்திறனாளிகள் டெண்டரில் பங்கேற்கவில்லை. இதனால் கடைகள் ஒதுக்கவில்லை என்று தெரியவந்தது.
மாநில ஊரக உள்ளாட்சி விதியின்படி அதிகளவில் டெண்டர் கோரும் மாற்றுத்திறனாளிகளுக்கே 5 சதவீத கடைகள் ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அதிகபட்ச தொகை செலுத்த இயலாமல் மாற்றுத்திறனாளிகள் இது போன்ற டெண்டர்களில் பங்கேற்காத நிலை உருவாகிறது. எனவே, பொது டெண்டர்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீதம் ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான நகர்ப்புற உள்ளாட்சி விதியை செல்லாது என்று உத்தரவிட வேண்டும்.இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், மரியா கிளெட் ஆகியோர், மனுவிற்கு நகராட்சி நிர்வாகத்துறை முதன்மைச் செயலர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை முதன்மைச் செயலர், ஊரக மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து துறை முதன்மை செயலர், நகராட்சி நிர்வாகத்துறை இயக்குநர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.
The post நகர்ப்புற உள்ளாட்சி விதிக்கு எதிராக வழக்கு appeared first on Dinakaran.