டேராடூன்,
உத்தரகாண்டின் டேராடூன் நகரை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் மஞ்சேஷ் குமார் (வயது 42). இவருடைய நீண்டகால தொழில்முறை கூட்டாளி சஞ்சய் சிங் என்ற பாஜி. எனினும், பிளாட்டுகளை பிரித்து விற்பதற்காக, பாஜி வாங்கிய சிறிய அளவிலான நிலம் தொடர்பாக, இவர்கள் இருவருக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது. அதில், தனக்கு 50 சதவீதம் பங்கு கொடுக்க வேண்டும் என மஞ்சேஷ் கோரி வந்துள்ளார். ஆனால், பாஜி அதனை ஏற்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த மஞ்சேஷ், கூலிப்படையை ஏவி பாஜியை தீர்த்து கட்டுவது என முடிவு செய்துள்ளார். இதற்காக, அர்ஜுன் குமார் (வயது 30) என்பவரை கூலிக்கு அமர்த்தியுள்ளார். ஆனால் அந்நபரோ, பாஜியிடம் எல்லா விசயங்களையும் கூறி விட்டார்.
இதன்பின் நடந்த விவரங்களை பற்றி சிறப்பு போலீஸ் சூப்பிரெண்டு அஜய் சிங் கூறும்போது, பாஜி பதிலுக்கு ரூ.10 கோடியை அர்ஜுனிடம் கொடுத்து மஞ்சேஷை கொலை செய்யும்படி கூறியுள்ளார்.
பெரிய தொகை என தெரிந்ததும், அர்ஜுன் முடிவை மாற்றி கொண்டார். மஞ்சேஷை கொலை செய்வது என்ற முடிவுக்கு வந்துள்ளார். இதன்பின்னர், பட்டேல் நகரில் உள்ள சச்சின் என்ற நண்பரின் வீட்டுக்கு சென்று, விருந்து ஒன்றில் பங்கேற்க வரும்படி மஞ்சேஷை அழைத்துள்ளார்.
அவரும் சென்றுள்ளார். அப்போது, அவருக்கு அர்ஜுனும், சச்சினும் குடிக்க மதுபானம் கொடுத்து உள்ளனர். இதன்பின்னர், இருவரும் சேர்ந்து மஞ்சேஷை கொலை செய்து விட்டு தப்பியோடினர். போகும்போது, மஞ்சேஷின் தங்க சங்கிலி, மோதிரம் மற்றும் கார் சாவிகள் ஆகியவற்றை மற்றொரு கூட்டாளியான அப்சல் மாலிக்கிடம் கொடுத்து விட்டு சென்றனர் என்றார்.
கடந்த நவம்பர் 29-ந்தேதி இந்த சம்பவம் நடந்தது. அடுத்த நாள் காலை தகவல் அறிந்து சச்சினின் வீட்டில் கிடந்த மஞ்சேஷின் உடலை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர். சோனிபத் நகரில் அர்ஜுனையும், டேராடூனின் ஆஷாரோடி சோதனை சாவடியில் சச்சினையும் கைது செய்தனர். சஞ்சய் சிங் மற்றும் மாலிக் ஆகிய இருவரும் செவ்வாய் கிழமை கைது செய்யப்பட்டனர் என அஜய் சிங் கூறினார். மஞ்சேஷின் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.