முருகப் பெருமானுக்கான மிக உகந்த விரத நாட்களில் ஒன்று தைப்பூசம். தை மாதத்தில் வரும் பவுர்ணமி திதியும், பூசம் நட்சத்திரமும் இணைந்து வரும் நாளையே தைப்பூச நாளாக கொண்டாடுகிறோம். முருகப் பெருமான், ஞானப் பழத்தை பெற முடியவில்லையே என தாய்-தந்தையிடம் கோபம் கொண்டு பழனி மலையில் ஆண்டிக் கோலம் கொண்டு அமர்ந்த தினம் தான் தைப்பூசம்.
முருக பக்தர்களால் விசேஷமாக கொண்டாடப்படும் தனிப்பெரும் விழாவாக தைப்பூசம் உள்ளது. தமிழ்நாட்டில் பெரும்பாலான முருக பக்தர்கள் தைப்பூசத்திற்கு முன்பு 48 நாட்கள் (ஒரு மண்டலம்) விரதம் இருப்பது வழக்கம்.
செல்வச் செழிப்பு பெருக, துன்பங்கள் விலக, கடன் பிரச்சனையில் இருந்து விடுபட முருகப் பெருமானை மனதார வேண்டிக் கொண்டு இந்த 48 நாள் விரதத்தை இருக்கலாம்.
2025-ம் ஆண்டுக்கான தைப்பூசம் பிப்ரவரி 11-ந் தேதி தேதி வருகிறது. எனவே, தைப்பூச விரதம் இருக்க விரும்புபவர்கள் இன்று வியாழக்கிழமை முதல் தைப்பூச தினமான பிப்ரவரி 11-ந் தேதி வரை மொத்தம் 48 நாட்கள் இந்த விரதத்தை கடைபிடிக்க வேண்டும். தமிழகத்தில் பலர் நேற்றே இந்த விரதத்தை மாலை அணிந்து தொடங்கி விட்டனர்.
தைப்பூச விரதம் இருப்பவர்கள் தினமும் காலையில் எழுந்து அருகில் இருக்கும் முருகன் கோவிலுக்கு சென்று, தங்களின் கோரிக்கையை சொல்லி மனதார வேண்டிக்கொள்ள வேண்டும். பிறகு வீட்டிற்கு வந்து பூஜை அறையில் விளக்கேற்றி வைத்து, முருகனுக்கு ஏதாவது இனிப்பு நைவேத்தியம் செய்து வைத்து வழிபட வேண்டும். நைவேத்தியம் ஏதும் செய்ய முடியாதவர்கள் எளிமையாக வெற்றிலை பாக்கு, ஒரு வாழைப்பழம் வைத்து அல்லது சிறிது கற்கண்டு வைத்து வழிபடலாம்.