தேர்தல் விதி ‘மீறல்’

6 hours ago 2

ஒன்றிய அரசு கடந்த 20ம் தேதி, தேர்தல் விதிகளில் ஒரு முக்கிய திருத்தத்தை மேற்கொண்டது. அதாவது, பொதுமக்கள் தேர்தல் தொடர்பாக எழும் சில சந்தேகங்களை, தேர்தல் ஆணையம், நீதிமன்றம் அல்லது ஆர்டிஐ மூலமாக இதுவரை கேட்டுப் பெறலாம். அவ்வாறு கேட்கப்படும் ஆவணங்களும் கொடுக்கப்பட்டு வந்தன. இதற்கு செக் வைக்கும் வகையில், ஒன்றிய அரசு தேர்தல் நடத்தை விதிகள் 1961 – விதி 93ல் சில திருத்தங்களை மேற்கொண்டது.

முன்னதாக தேர்தல் நடத்தை விதி 93 (2) (ஏ)ன் படி, தேர்தல் தொடர்பான மின்னணு ஆவணங்கள் உள்பட அனைத்து ஆவணங்களும் பொது ஆய்வுக்கு கிடைக்கும் என இருந்தது. திருத்திய விதிகளின்படி, அனைத்து ஆவணங்களையும் பொதுமக்கள் பெற முடியாது. வேட்புமனுக்கள், நியமிக்கப்பட்ட தேர்தல் முகவர்கள், தேர்தல் முடிவுகள், செலவு கணக்குகள் போன்றவற்றை மட்டுமே பெற முடியும். சிசிடிவி உள்ளிட்ட மின்னணு ஆவணங்களை யாரும் கேட்டுப் பெற முடியாது.

மஹாராஷ்டிரா மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவின்போது, மாலை 5 மணிக்கு பதிவாகி இருந்த வாக்கு எண்ணிக்கையை விட, இரவு 75 லட்சம் வாக்குகள் கூடுதலாக அறிவிக்கப்பட்டன. பொதுவாக, தேர்தல் வாக்குப்பதிவு முடிந்தும் வாக்காளர்கள் வரிசையில் நின்றால், அனுமதி சீட்டு முறையில்தான் வாக்களிக்க முடியும். இதன்படி சுமார் 100 பேர் மட்டுமே வாக்களிக்க முடியும். ஆனால், அதிரடியாக 75 லட்சம் வாக்குகள் அதிகமானது பெருங்குழப்பத்தையும், தேர்தல் நியாயமான முறையில் நடந்துள்ளதா என்ற சந்தேகத்தையும் கிளப்பியதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியிருந்தது.

இதுதொடர்பாக வழக்கு தொடரப்பட்ட நிலையில், அரியானா சட்டமன்ற தேர்தலில் பாஜ வென்ற வாக்குச்சாவடியில் பதிவான சிசிடிவி காட்சிகள், வாக்குப்பதிவு ஆவணங்களை கோரி, பிரபல வழக்கறிஞர் மெகமூத் பிரச்சா என்பவர், பஞ்சாப் – அரியானா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். நீதிமன்றம் மேற்கண்ட ஆவணங்களின் நகல்களை வழங்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டிருந்தது. தொடர்ச்சியாக மாநில சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் முறைகேடு நிகழ்ந்ததாக கூறி உயர்நீதிமன்றங்கள் மற்றும் உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டு வருகின்றன.

இதன்காரணமாகவே, விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. ஆனால், நீதிமன்ற வழக்கு ஒன்றின் அடிப்படையிலேயே இந்த திருத்தம் மேற்கொள்ளப்பட்டதாக ஒன்றிய அரசு, தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளன. ஆனால், என்ன வழக்கு, ஏனிந்த மாற்றம் என உரிய முறையில் விளக்கவில்லை.மின்னணு ஆவணங்களை பொதுமக்கள் பெறுவதை தடுக்கும் வகையிலேயே, தேர்தல் விதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இது இந்திய தேர்தல் ஆணையத்தின் ஒருமைப்பாட்டை அழிக்கும் பாஜ அரசின் திட்டமிட்ட சதி என் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றம் சாட்டியுள்ளார். நாட்டில் சுதந்திரமான – நியாயமான தேர்தல்கள் நடைபெறுவதன் மீது தொடுக்கப்பட்டுள்ள மக்களாட்சிக்கு விரோதமான தாக்குதல் என முதல்வர் மு.க.ஸ்டாலினும் தேர்தல் விதி திருத்தத்திற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பல்வேறு எதிர்கட்சிகளும் இந்த திருத்தத்தை கடுமையாக எதிர்த்து வருகின்றன. ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல், தேர்தல் விதிகளில் திருத்தம் என நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நடந்த நிகழ்வுகள், ஒட்டுமொத்த இந்தியாவையும் சூடாக்கி இருக்கிறது என்பது மிகையல்ல.

The post தேர்தல் விதி ‘மீறல்’ appeared first on Dinakaran.

Read Entire Article