அரியலூர்,
அரியலூர் மாவட்டம் கொல்லாபுரம் பகுதியில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ.120 கோடி மதிப்பிலான 53 வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். ரூ.88 கோடி மதிப்பில் 507 முடிவுற்ற திட்டப்பணிகளை அவர் தொடங்கி வைத்தார். மேலும், ரூ.174 கோடி மதிப்பில் 21,862 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பின்னர் உரையாற்றிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-
அரியலூரில் பல திட்டங்களை தீட்டியதால் கம்பீரமாக உங்கள் முன் நிற்கிறேன். அரியலூரில் 3 கூட்டுக்குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படும். பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும். ரூ.25 கோடி மதிப்பில் புதிய தடுப்பணையும், ரூ.15 கோடியில் 35 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு கட்டிடமும் கட்டப்படும்.
தமிழக மக்கள் தி.மு.க. மீது வைத்துள்ள அன்பு எடப்பாடி பழனிசாமிக்கு கலக்கத்தை கொடுத்துள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் பல திட்டங்களை கொண்டு வந்தது போல் சிரிக்காமல் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்துள்ளார். எப்போது முடியும் என்று தமிழர்கள் காத்திருந்த ஆட்சிதான் எடப்பாடி பழனிசாமி ஆட்சி.
ஒரு சிலரை போல டிவியில் பார்த்து பிரச்சினைகளை தெரிந்து கொள்பவன் அல்ல நான். தேர்தலுக்காக வருபவன் நான் இல்லை. மக்களின் தேவைக்காக வருகிறேன். திட்டங்களுக்கு நிதி ஒதுக்கிவிட்டு ஓய்வு எடுக்க செல்பவன் நான் இல்லை. பிரச்சினைகளை நேர்கொண்டு அதனை தீர்ப்பவன். மக்களுக்காக பார்த்து பார்த்து திட்டம் தீட்டுபவன்.
தேடி வந்து மனுக்கள் தரும் மக்களின் நம்பிக்கையை என்றும் காப்பாற்றுவேன் என உறுதி தருகிறேன். குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடுகளை போக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மிக மிக நலிந்த மக்களுக்கான ஆட்சியாக தி.மு.க. ஆட்சி இருக்க வேண்டும் என நினைக்கிறேன். உங்கள் குடும்பத்தில் ஒருவனாக இருந்து நலத்திட்டங்களை நிறைவேற்றுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.