தூத்துக்குடி: தென் தமிழகத்தில் முதல்முறையாக தூத்துக்குடியில் ரூ.32.50 கோடியில் 63 ஆயிரம் சதுர அடி பரப்பில் அமைக்கப்பட்டுள்ள மினி டைடல் பூங்காவை முதல்வர் முக.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கும் திட்டத்தை இன்று துவக்கி வைக்கிறார். தகவல் தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. முன்பு தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் மட்டுமே அமைக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 2ம் நிலை நகரங்களுக்கும் விரிவடைந்து வருகிறது.
தமிழ்நாட்டின் ஐடி சேவை துறை தொடர்ந்து வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையில், இத்துறையினை மேம்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு அரசு டைடல் பார்க் வாயிலாக புரட்சி மேற்கொண்டுள்ளது. மாநிலம் முழுவதும் இருக்கும் படித்த பட்டதாரிகள் ஐடி துறையில் பணியாற்றுவதில் ஆர்வமாக இருப்பது மட்டும் அல்லாமல் அதற்கான திறனையும் வளர்த்துக்கொள்ள தயாராக உள்ளனர். இதேவேளையில் இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் மட்டும் அல்லாமல் வெளிநாட்டு தொழில்நுட்ப நிறுவனங்களும் 2ம் மற்றும் 3ம் நிலையிலான தமிழக நகரங்களில் தங்கள் அலுவலகங்களை திறக்க தயாராகி வருகின்றன.
படித்த இளைஞர்களையும் இந்த நிறுவனங்களையும் இணைக்கும் பாலமாக தமிழ்நாடு அரசு, டைடல் நியோ என்ற மினி ஐடி பூங்காக்களை தமிழகத்தின் சிறிய நகரங்களில் உருவாக்க துவங்கியுள்ளது. இதன் மூலம் சிறிய நகரங்களில் ஐடி நிறுவனங்கள் வேகமாக காலூன்றி வருகின்றன. அதன்படி விழுப்புரம், தஞ்சாவூரை தொடரந்து 3வதாக தென் தமிழ்நாட்டில் முதன்முறையாக துறைமுக நகரமாக திகழும் தூத்துக்குடியில், தூத்துக்குடி-திருச்செந்தூர் ரோட்டில் எம்ஜிஆர் நகர் எக்ஸ்டன்சன் ஏரியாவில் டைடல் நியோ பார்க் அமைக்க கடந்த 2023 மே மாதம் முதல்வர் முக.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
தமிழ்நாடு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில் ரூ.32.50 கோடி மதிப்பில் 63 ஆயிரம் சதுரஅடி பரப்பில் இந்த மினி டைடல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. தென்தமிழகத்தில் முதன் முறையாக தூத்துக்குடியில் அதிநவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த டைடல் நியோ பார்க்கில் தற்போது இரு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் முழுவீச்சில் பணியை துவக்கியுள்ளது. இதனை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
முன்னதாக விழா நடந்த இடத்திற்கு வந்த அவர், ஆயுதப்படை போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதனையடுத்து டைடல் நியோ பார்க்கின் முழு விபரங்களையும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை மேலாண் இயக்குநர் சந்தீப் நந்தூரி விளக்கினார். தொடர்ந்து டைடல் நியோ பார்க் திட்ட விளக்கம் குறித்து காணொலி காட்சி மூலம் விளக்கப்பட்டது. பின்னர் டைடல் நியோ பார்க்கில் அமைந்துள்ள கான்பரன்ஸ் ஹாலில் திறப்பு விழா நடந்தது.
தொழில்துறை அமைச்சர் டிஆர்பி. ராஜா வரவேற்றார். தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அரசு செயலர் அருண்ராய், மேலாண் இயக்குநர் சந்தீப்நந்தூரி, கனிமொழி எம்பி, அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து டைடல் நியோ பார்க்கில் பணியை துவங்கியுள்ள இரு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களான ப்ரோ ஹெல்த் சிஸ்டம்ஸ் பிரைவேட் லிட் மற்றும் புரோட்டக்கால் டிஎம்சி ஆகிய நிறுவனங்களுக்கு ஒப்பந்த பணி ஆணைகளை அந்நிறுவன நிர்வாக அதிகாரிகளிடம் முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
தொடர்ந்து தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அரசு செயலர் அருண்ராய் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் முதல்வரின் செயலர் லட்சுமிபதி, டிட்கோ எம்டி பாரதி, கலெக்டர் இளம்பகவத், மாநகராட்சி கமிஷனர் மதுபாலன், கூடுதல் கலெக்டர் ஐஸ்வர்யா, மாநகாட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, எம்எல்ஏக்கள் மார்க்கண்டேயன், சண்முகையா, தென்மண்டல ஐஜி ஆனந்த்குமார் சின்கா, டிஐஜி மூர்த்தி, எஸ்பி ஆல்பர்ட்ஜாண், உதவி போலீஸ் கமிஷனர்கள் அனிதா, விஜயகுமார் மற்றும் அதிகாரிகள், அரசு அலுவலர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி காமராஜ் கல்லூரி வளாகத்தில் இன்று (30ம் தேதி) காலை 10 மணிக்கு நடைபெறும் விழாவில் புதுமைப்பெண் விரிவாக்கத் திட்டத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படித்து இந்த ஆண்டு உயர்கல்வியில் சேர்ந்துள்ள 75,028 மாணவிகள் மாதம் ரூ.ஆயிரம் பெற்றுப் பயனடையவுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் இவ்வாண்டு 4,680 மாணவிகள் பயனடைகின்றனர்.
* வசதிகள் ஏராளம்
தூத்துக்குடியில், திருச்செந்தூர் ரோட்டில் எம்ஜிஆர் நகர் எக்ஸ்டன்சன் ஏரியாவில் டைடல் நியோ பார்க் அமைக்க கடந்த 2023 மே மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதனை தொடர்ந்து இதன் கட்டுமானப்பணிகள் துரிதகதியில் நடந்து முடிந்துள்ளது. சுமார் ரூ.32.5 கோடி மதிப்பில் 4.16 ஏக்கர் பரப்பளவில், 63 ஆயிரத்து 100 சதுர அடிஅளவில் டைடல் நியோ பார்க் உருவாகி உள்ளது. ஒரே நேரத்தில் 117 கார்கள், 237 பைக்குகள் நிறுத்தி வைக்க முடியும்.
மேலும் இங்கு ஐடி மற்றும் அதனை சார்ந்து இயங்கும் நிறுவனங்கள் அமைய வசதியாக தடையற்ற மின்வசதி, வெகு வேகமான இணைய இணைப்பு வசதி, தடையற்ற மின் வசதி, அலுவலகங்கள், குளிர்சாதன வசதிகள் கொண்ட அலுவலக அறைகள், மீட்டிங் ஹால்கள், கலையரங்கம், நிர்வாக அலுவலகங்கள், பயோ மெட்ரிக் சிஸ்டம், பணியாளர்கள் ஓய்வறை, உணவு அருந்த வசதியாக பல்வகை டைனிங் ஹால்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் கொண்டவையாக உருவாகியுள்ளது.
மேலும் தரை மற்றும் 4 தளத்துடன் கூடிய இந்த டைடல் நியோ பார்க் 2 பகுதிகளாக பிரிக்கப்பட்டு 2 பெரிய ஐடி நிறுவனங்கள் அமைக்க ஏதுவாக வடிவமைக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்த ஆணையை அந்நிறுவனங்களுக்கு தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் நேற்று நடந்த திறப்பு விழாவில் வழங்கினார். தற்போது முதல் இந்த ஐடி நிறுவனங்கள் இயங்கத் துவங்கும் என்றும் இதன் மூலம் சுமார் 650க்கும் மேற்பட்ட தொழிற்நுட்ப வல்லுநர்களுக்கு நேரடியாக வேலைவாய்ப்பு கிடைக்கும் அளவில் குளிர்சாதன மற்றும் 24 மணி நேர பாதுகாப்பு வசதியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* மேலும் ஒரு டைடல் பூங்கா
இந்த டைடல்பூங்கா அமைந்துள்ள தூத்துக்குடி – திருச்செந்தூர் சாலை விரைவில் போக்குவரத்து வசதிக்காக 4 வழிச்சாலையாக மாற்றப்படவுள்ளது. தூத்துக்குடி துறைமுகம் செல்லும் 6 வழிச்சாலை இதனருகே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தூத்துக்குடியில் இந்த டைடல் நியோ பார்க்கை தொடர்ந்து மேலும் ஒரு டைடல் பார்க் அமைய வாய்ப்புள்ளதாவும், அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார்.
The post தென்தமிழகத்தில் முதல்முறையாக தூத்துக்குடியில் மினி டைடல் பூங்கா திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார், புதுமைப்பெண் திட்ட விரிவாக்கத்தை இன்று துவக்கி வைக்கிறார் appeared first on Dinakaran.