தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு காரணமான அதிகாரிகளுக்கு பதவி உயர்வு - டி.டி.வி தினகரன் கண்டனம்

11 hours ago 5

சென்னை,

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு காரணமான அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கியிருக்கும் தி.மு.க. அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது என்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்துவதற்கு முக்கிய காரணமாக கூறப்பட்ட காவல் அதிகாரி சைலேஷ் குமாருக்கு கடந்த ஜனவரியில் டிஜிபியாக பதவி உயர்வு வழங்கிய தமிழக அரசு, தற்போது துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்ட துணை வட்டாட்சியர் கண்ணனுக்கு தற்காலிக வட்டாட்சியராக பதவி உயர்வு வழங்கியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு காரணமான அதிகாரிகள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்க முன்வராத தி.மு.க. அரசு, மாறாக அவர்களுக்கு பதவி உயர்வு வழங்கி அழகு பார்த்து வருவது துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மத்தியிலும், தூத்துக்குடி மாவட்ட மக்களிடத்திலும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதியரசர் அருணா ஜெகதீசன் தாக்கல் செய்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்திருந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பதவி உயர்வு வழங்கி வருவதுதான் அவர்கள் மீது எடுக்கும் கடும் நடவடிக்கையா?

எனவே, துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு காரணமாக கூறப்படும் அரசு மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் பதவி உயர்வை உடனடியாக ரத்து செய்வதோடு, அதே வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைத்து அதிகாரிகள் மீதும் சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு காரணமான அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கியிருக்கும் திமுக அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது - பதவி உயர்வை உடனடியாக ரத்து செய்வதோடு, துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடர்புடைய அனைவரின் மீதும் சட்டப்படி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.…

— TTV Dhinakaran (@TTVDhinakaran) September 19, 2024


Read Entire Article