மணிப்பூர்: ராணுவம், போலீசார் கூட்டு நடவடிக்கையில் 28 கிலோ சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

4 hours ago 3

இம்பால்,

மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து மெய்தி மற்றும் குகி சமூகத்தினர் இடையே வன்முறை, மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. மணிப்பூரில் பல மாதங்களாக அமைதி காணப்பட்ட நிலையில், இந்த மாத தொடக்கத்தில் வன்முறை சம்பவம் ஏற்பட்டது. இதனால், மணிப்பூர் டி.ஜி.பி. ராஜீவ் சிங், தொடர்ந்து எச்சரிக்கையுடன் இருக்கும்படி அனைத்து மாவட்ட எஸ்.பி.க்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கினார்.

வெவ்வேறு பாதுகாப்பு படையினர் இடையே முறையான ஒத்துழைப்புடன் கூடிய, கூட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படியும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. மத்திய மற்றும் மாநில அரசு படைகள் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு உள்ளன.

இந்த சூழலில், மணிப்பூரில் ராணுவம் மற்றும் போலீசார் இணைந்து கூட்டாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த தேடுதல் நடவடிக்கையில், ராணுவத்தின் வெடிகுண்டு கண்டறியும் மோப்ப நாய்களும் ஈடுபடுத்தப்பட்டன. இந்த சோதனையில், போங்ஜாங் பகுதியருகே மலைப்பாங்கான இடங்களிலும் மற்றும் இம்பால் கிழக்கு மாவட்டத்தின் இதம் கிராமத்திலும் இருந்து சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டன.

28.5 கிலோ எடை கொண்ட இந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்ட நிலையில், பெரிய அளவிலான பேரிடர் தவிர்க்கப்பட்டதுடன், எண்ணற்றோரின் வாழ்க்கையும் பாதுகாக்கப்பட்டு உள்ளது என ராணுவம் தெரிவித்து உள்ளது.

இவை கடந்த 3 மாதங்களில் கைப்பற்றப்பட்ட 2-வது மிக பெரிய அளவிலான சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் ஆகும். கடந்த ஜூலை 20-ந்தேதி இம்பால் கிழக்கு மாவட்டத்தின் சாய்சங் பகுதியிலுள்ள மலைப்பாங்கான இடங்களில் இருந்து 33 கிலோ எடை கொண்ட சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டு, செயலிழக்க செய்யப்பட்டன.

இதேபோன்று போலீசார் கூறும்போது, மியான்மரில் இருந்து சிலர் நாட்டுக்குள் ஊடுருவி உள்ளனர் என தவுபால் மாவட்டத்தில் உள்ள மூத்த அதிகாரிகளுக்கு உளவு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து எந்தவி தாக்குதல்களும் நடந்து விடாமல் இருப்பதற்காக முன்னெச்சரிக்கைக்காக, பாதுகாப்பு படையினர் உஷார்படுத்தப்பட்டனர் என கூறியுள்ளனர். இந்த கூட்டு நடவடிக்கையானது தொடர்ந்து நடந்து வருகிறது.

Read Entire Article