சென்னை,
துபாயில் நடந்த 24H கார் பந்தயத்தில் 991 பிரிவில் நடிகர் அஜித்தின் 'அஜித்குமார் ரேசிங்' அணி மூன்றாவது இடம் பிடித்து அசத்தியுள்ளது. தனது அணி மூன்றாவது இடம்பிடித்த நிலையில், நடிகர் அஜித்குமார், இந்திய தேசியக்கொடியுடன் வலம் வந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த கார் பந்தயத்தில் பங்கேற்க தயாராகி வந்த அஜித் கடைசி நேரத்தில் பந்தயத்தில் இருந்து விலகிக் கொண்டார். எனினும், அவரது அணி பங்கேற்றது.
கார் பந்தயத்தில் மூன்றாவது இடம்பிடித்த அஜித்குமார் ரேசிங் அணிக்கு தமிழ் திரையுலகைச் சேர்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அஜித்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
'24H துபாய் 2025'-ல் அஜித்குமார் மற்றும் அவரது குழுவினர் 991 பிரிவில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளனர் என்பதை கேள்விப்பட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். இந்த குறிப்பிடத்தக்க சாதனைக்காக அஜித்குமார் மற்றும் அவரது குழுவினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த மதிப்புமிக்க பந்தய நிகழ்வில் நமது திராவிட மாடல் அரசின் 'தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின்' லோகோவை காட்சிப்படுத்தியதற்காக அஜித்குமார் ரேசிங் அணிக்கு நன்றி கூறுகிறேன். அஜித் தொடர்ந்து வெற்றி பெற்று, நமது நாட்டிற்கும் தமிழ்நாட்டிற்கும் இன்னும் பெருமை சேர்க்க வாழ்த்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.