துணைவேந்தர் நியமனம்: யு.ஜி.சி. பரிந்துரையை திரும்பப்பெற வேண்டும் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

16 hours ago 2

சென்னை,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பல்கலைக்கழக மான்ய குழுவின் வரைவு விதிமுறைகள் மாநில உரிமைகளை பறித்து அதிகார குவிப்பிற்கு வழி வகுப்பதோடு, கார்ப்பரேட் மயத்திற்கும் வழி வகுப்பதாகும். கல்வி என்பது பொதுப்பட்டியலில் இருந்தாலும் தொடர்ந்து மாநில உரிமைகளை பறிக்கிற நடவடிக்கைகளை ஒன்றிய அரசு மேற்கொண்டு வருகிறது. தற்போது வெளியிடப்பட்டுள்ள பல்கலைக்கழக மானியக் குழுவின் வரைவு விதிமுறைகள் துணைவேந்தர்கள் நியமனத்தில் மாநிலங்களுக்கு உள்ள அதிகாரங்களை முழுமையாக பறித்து கவர்னரிடம் ஒப்படைப்பதாக உள்ளது.

வேந்தர் என்ற முறையில் கவர்னரே மூன்று உறுப்பினர் தெரிவுக் குழுவை நியமிப்பார் என்பதும் அவருடைய தெரிவு நபரே அக்குழுவின் தலைவராக இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பொருள் மக்களால் தேந்தெடுக்கப்பபட்ட மாநில அரசுக்கு துணைவேந்தரை தேர்வு செய்வதில் எந்த பங்கும் இருக்காது என்பதே. ஏற்கனவே எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் துணைவேந்தர்களை தன்னிச்சையாக நியமிக்கும் போக்குகளை கவர்னர்கள் கடைப்பிடித்து வரும் வேளையில் பல்கலைக்கழக மானியக் குழுவின் வரைவு விதிமுறைகள் அத்தகைய அராஜக போக்கிற்கு ஆளுநர்களுக்கு சட்டரீதியான அதிகாரம் அளிக்கிறது.

இந்த வரைவு விதிமுறைகள் மத்திய சட்டத்தில் உருவாக்கப்பட்ட நிறுவனங்களுக்கு மட்டுமின்றி மாநிலச் சட்டங்களால் உருவாக்கப்பட்ட நிறுவனங்களுக்கும் அவற்றின் உறுப்பு நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்று கூறப்பட்டிருப்பது கூட்டாட்சி தத்துவத்தின் மீது தொடுக்கப்பட்டுள்ள கடுமையான தாக்குதலாகும்.

மேலும் நேரடியாக கல்விப்புலம் சாராத தொழில், பொது நிர்வாகம், பொதுத்துறை நிறுவனங்களில் உயர் பொறுப்புகளை வகித்தவர்களும் துணைவேந்தர்களாக நியமிக்கப்படலாம் என்ற வரைவு விதிமுறையில் உள்ள அம்சமும் அபாயகரமானதாகும். உயர் கல்வி நிலையங்களில் ஆர்.எஸ்.எஸ் பின்புலத்துடன் கூடிய நபர்களை நியமிப்பதற்கும், சித்தாந்த ரீதியான ஊடுருவல்களை செய்வதற்குமான நடவடிக்கையாகும் இது.

தேசியக் கல்விக் கொள்கை என்ற பெயரால் தொடர்ந்து கூட்டாட்சி கோட்பாட்டிற்கு எதிராக ஒன்றிய அரசு தொடர்ந்து வரும் தாக்குதல்களின் தொடர்ச்சியாகவே இந்த வரைவு விதிமுறைகள் அமைந்துள்ளன. வணிகமயம் - மதவெறி மயம் - அதிகாரக் குவிப்பு ஆகிய இலக்குகளை நோக்கிய பல்கலைக்கழக மானியக் குழுவின் வரைவு பரிந்துரைகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வலியுறுத்துகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read Entire Article