சென்னை ,
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தரை தேர்வு செய்வதற்காக தமிழக அரசின் சார்பில் தேடுதல் குழுவை அமைத்து பிறப்பிக்கப்பட்டுள்ள ஆணை சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிரானது என்றும், அதனால் அந்த ஆணையை அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். இதன்மூலம் துணைவேந்தர் நியமனம் குறித்து அரசுக்கும், கவர்னர்னருக்கும் மேலும் ஒரு மோதல் ஏற்பட்டுள்ளது. 6 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் பதவி காலியாக உள்ள நிலையில் இந்த மோதல் தேவையற்றதாகும்.
13 மாதங்கள் ஆகியும் துணைவேந்தர்கள் நியமனம் குறித்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு கொண்டு வர முடியாதது விந்தையாக உள்ளது. துணைவேந்தர்கள் நியமனம் குறித்த சர்ச்சை தொடர வேண்டும் என்று தமிழக அரசு விரும்புகிறதோ? என்ற ஐயத்தைத் தான் இது ஏற்படுத்துகிறது. சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையிலுள்ள வழக்கின் விசாரணையை விரைவுபடுத்தி இந்த சிக்கலுக்கு தமிழக அரசு தீர்வு காண வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.