புதுடெல்லி,
தீபாவளி பண்டிகையையொட்டி மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பெயிண்ட்டர்கள் மற்றும் குயவர்களுடன் கலந்துரையாடினார். தனது சகோதரியின் மகன் ரைஹான் ராஜீவ் வத்ராவுடன் இணைந்து பெயிண்ட் அடிக்கும் பணியையும் அவர் மேற்கொண்டார். மேலும் அகல் விளக்குகளை தயார் செய்யும் ஒரு குடும்பத்தினரை சந்தித்து ராகுல் காந்தி பேசினார்.
இது தொடர்பாக வீடியோ ஒன்றை ராகுல் காந்தி 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் பேசியிருப்பதாவது;-
"இந்த தீபாவளியை சில பெயிண்டர் சகோதரர்களுடன் சேர்ந்து வேலை செய்தும், ஒரு குயவர் குடும்பத்துடன் சேர்ந்து மண் பாண்டங்களை தயார் செய்தும் மகிழ்ச்சியாக கொண்டாடினேன். அவர்களின் வேலையை அருகில் இருந்து பார்த்து, கற்றுக்கொள்ள முயற்சித்தேன். அவர்கள் சந்திக்கும் சிரமங்களையும், சிக்கல்களையும் புரிந்துகொண்டேன்.
நாம் பண்டிகைகளை மகிழ்ச்சியாக கொண்டாடுகிறோம். ஆனால் அவர்களோ, கொஞ்சம் பணம் சம்பாதிக்க தங்கள் கிராமம், நகரம், குடும்பம் ஆகியவற்றை மறந்து உழைக்கிறார்கள். குயவர்கள் களிமண்ணில் இருந்து மகிழ்ச்சியை உருவாக்குகிறார்கள். பிறருடைய பண்டிகைகளுக்கு அவர்கள் ஒளி ஏற்றுகிறார்கள். அதே சமயம் அவர்களால் ஒளியில் வாழ முடிகிறதா?
தீபாவளி என்பது வறுமை மற்றும் ஆதரவற்ற நிலை என்ற இருளை நீக்கும் ஒளி ஆகும். மக்களின் திறமைக்கு உரிய அங்கீகாரமும், மதிப்பும் அளிக்கும் வகையில் ஒரு அமைப்பை நாம் உருவாக்க வேண்டும். இந்த தீபாவளி அனைவரின் வாழ்விலும் செழிப்பு, முன்னேற்றம் மற்றும் அன்பை கொண்டுவரும் என்று நம்புகிறேன்."
இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மேலும் குயவர்களுடன் சேர்ந்து அவர் தயாரித்த விளக்குகளை தனது தாய் மற்றும் சகோதரியிடம் கொடுக்கப் போவதாக அவர் கூறினார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை யாத்திரை, மணிப்பூர் முதல் மும்பை வரை இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை ஆகியவற்றை நடத்திய பிறகு, ராகுல் காந்தி நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள தொழிலாளர்களை நேரில் சென்று சந்தித்து, அவர்களுடன் கலந்துரையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.