திருவண்ணாமலை,
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தினமும் காலையில் விநாயகர், சந்திரசேகரர் வீதிஉலாவும், இரவில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலாவும் நடக்கிறது.
கார்த்திகை தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான வெள்ளி தேரோட்டம் இன்று நடைபெற்றது. முன்னதாக காலையில் 63 நாயன்மார்கள் வீதிஉலா நடக்கிறது. பள்ளி மாணவர்கள் நாயன்மார்களை சுமந்து மாடவீதியை சுற்றி வலம் வந்தனர். சாமியை மாணவர்கள் வரிசையாக சுமந்து வந்த காட்சியை பக்தர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.
இந்த நிலையில், கார்த்திகை தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (செவ்வாய்கிழமை) நடக்கிறது. காலை 6 மணிக்கு மேல் 6.48 மணிக்குள் விநாயகர் தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. முதலில் விநாயகர் தேரும், அதைத்தொடர்ந்து முருகர் தேரும் வீதிஉலா செல்கிறது.
2 தேர்களும் நிலைக்கு வந்ததும் பெரிய தேரான (சாமி தேர்) மகா ரதம் இழுக்கப்படும். ஆண்கள் ஒருபக்கமும், பெண்கள் ஒருபக்கமும் வடம் பிடித்து தேர் இழுப்பார்கள். தேரோட்டத்தையொட்டி மாடவீதிகள் முழுவதும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நின்று சாமி தரிசனம் செய்வார்கள். பெரிய தேர் நிலைக்கு வந்ததும் இரவில் அம்மன் தேரோட்டம் நடக்கும். அம்மன் தேரை பெண்கள் மட்டுமே இழுப்பார்கள். இந்த தேரின் பின்னால் சண்டிகேஸ்வரர் தேர் இழுக்கப்படும். காலை முதல் இரவு வரை தேரோட்டம் நடைபெறும்.
இந்நிலையில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் தேரோட்டத்தின்போது மாடவீதிகளில் கற்பூரம் ஏற்ற தடை விதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது. அதைபோல 13-ம் தேதி மகா தீபத்தன்றும் கிரிவலப்பாதையில் கற்பூரம் ஏற்ற தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.