திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 6 பேருக்கு தலா 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்: ஆந்திர அரசுக்கு செல்பெருந்தகை கோரிக்கை

10 hours ago 2

சென்னை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 6 பேருக்கு தலா 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என ஆந்திர அரசுக்கு செல்பெருந்தகை கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில், வெள்ளிக்கிழமை நடைபெறும் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் தரிசனத்தில் கலந்து கொள்ள திருப்பதி சீனிவாசம் தங்கும் விடுதி வளாகத்தில் உள்ள கவுண்டர்களில் இலவச தரிசன டோக்கன் வாங்குவதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் குவிந்ததால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி சேலத்தைச் சேர்ந்த பெண் உட்பட 6 பக்தர்கள் பலியாகியிருக்கிற சம்பவம் நெஞ்சை உலுக்குவதாக இருக்கிறது.

மேலும் 30 பக்தர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் 1 லட்சத்து 20 ஆயிரம் டோக்கன்கள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள கவுண்டரில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் கூடுவதை தடுக்க காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. லட்சக்கணக்கில் இலவச டோக்கன்கள் வழங்கும் போது நிறைய கவுண்டர்களை திறந்து ஒரே இடத்தில் பக்தர்கள் குவியாமல் தடுக்கிற பொறுப்பு திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்திற்கு இருக்கிறது. அந்த பொறுப்பை காவல்துறையினரின் ஒத்துழைப்போடு சரிவர நிர்வகிக்காத காரணத்தினால் ஒருவரை ஒருவர் முண்டியடித்துக் கொண்டு சென்றதினால் 6 பேர் பலியான இக்கோர சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.

பொதுவாக, இலவசங்களை வழங்கும் போது மக்கள் நெரிசலில் சிக்கி இத்தகைய கோர சம்பவங்கள் ஏற்கனவே நிறைய நடந்திருக்கின்றன. அதிலிருந்து படிப்பினையை பெற்று கோர சம்பவங்கள் நிகழாமல் தடுக்க உரிய நடவடிக்கையை திருமலை திருப்பதி தேவஸ்தானம் உரிய முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளை ஏன் எடுக்கவில்லை என்று தெரியவில்லை. இதுகுறித்து ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு விசாரணை நடத்தி 6 பேர் பலியான சம்பவத்திற்கு உரிய காரணத்தை அறிய முற்பட வேண்டும். விபத்தில் பலியானவர்களுக்கு தலா ரூபாய் 25 லட்சம் ஆந்திர மாநில அரசு இழப்பீடு வழங்க வேண்டுமெனவும், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறேன். மேலும், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு தெரிவித்தார்.

The post திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 6 பேருக்கு தலா 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்: ஆந்திர அரசுக்கு செல்பெருந்தகை கோரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article