திருப்பதி விவகாரம்: விசாரணைக்கு பிரதமர் மோடி உத்தரவிட வேண்டும் - ரோஜா கோரிக்கை

10 hours ago 2

திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை (வெள்ளிக்கிழமை) வைகுண்ட ஏகாதசி விழா நடக்கிறது. அதையொட்டி நாளை அதிகாலை 4.30 மணியளவில் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. நாளை முதல் 19-ந்தேதி வரை 10 நாட்களுக்கு பக்தர்களுக்கு வைகுண்ட துவார தரிசனத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வைகுண்ட துவார தரிசன டோக்கன்கள் வாங்குவதற்காக நேற்று காலை முதலே பக்தர்கள் 8 மையங்களில் குவியத்தொடங்கினர். அதில், சீனிவாசம் தங்கும் விடுதி திருப்பதி பஸ் நிலையத்துக்கு அருகில் உள்ளதால், அங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் அங்குள்ள கவுண்ட்டர்கள் முன்னால் திரண்டு இருந்தனர். நேற்று இரவு 7 மணியளவில் சீனிவாசம் தங்கும் விடுதி வளாகத்தில் உள்ள கவுண்ட்டர்கள் திறக்கப்பட்டன.

அப்போது அங்கு குவிந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கவுண்ட்டர்களில் நுழைய முயன்றனர். அந்த நேரத்தில் பக்தர்களிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 6 பக்தர்கள் மயக்கமடைந்து கீழே விழுந்தனர். அவர்களை அங்கிருந்த தேவஸ்தான ஊழியர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருப்பதி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அதில் பெண் பக்தர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர். 5 பக்தர்கள் கவலைக்கிடமாக இருந்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், அவர்களும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். கூட்ட நெரிசலில் சிக்கி காயம் அடைந்த 30 பக்தர்கள் காயம் அடைந்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, சம்பவத்தைக் கேள்விப்பட்ட முதல்-மந்திரி சந்திரபாபுநாயுடு காணொலி காட்சி மூலம் கலெக்டரை தொடர்பு கொண்டு விவரங்களை கேட்டறிந்தார். இலவச தரிசன டோக்கன்கள் பெற காத்திருந்த பக்தர்களிடையே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உள்பட 6 பக்தர்கள் பலியான சம்பவம் திருப்பதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், திருப்பதி கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் உயிரிழந்த விவகாரம் குறித்து ஆந்திர முன்னாள் மந்திரி ரோஜா கூறுகையில், "புஷ்பா 2 கூட்ட நெரிசல் விவகாரத்தில் நடிகர் அல்லு அர்ஜுனை கைது செய்ததைப் போல, திருப்பதி கூட்ட நெரிசல் சம்பவத்திலும் இதற்கு காரணமானவர்கள் கைது செய்யப்பட வேண்டும். லட்டு விவகாரத்தில் பரிகார தீட்சை செய்த துணை முதல்வர் பவன் கல்யாண், இந்த சம்பவத்திற்கும் தீட்சை செய்வாரா? அல்லது சந்திரபாபு நாயுடுவை ராஜினாமா செய்ய வைப்பாரா?. திருப்பதியில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த பிரதமர் மோடி உத்தரவிட வேண்டும். தவறு செய்தவர்கள் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்து சிறைக்கு அனுப்ப வேண்டும்" என்று கூறினார்.

Read Entire Article