திருச்சானூர்:
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை பிரம்மோற்சவம் கடந்த மாதம் 28-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தினமும் காலையிலும் இரவிலும் தாயார் வாகனங்களில் எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
சின்ன சேஷ வாகனம், பெரிய சேஷ வாகனம், ஹம்ச வாகனம், முத்தையாபு பாண்டிரி வாகனம் மற்றும் சிம்ம வாகன சேவை, கல்ப விருட்ச வாகன சேவை, ஹனுமந்த வாகன சேவை, சர்வ பூபால வாகனம், கருட வாகனம், சூரிய பிரபை வாகனம், சந்திர பிரபை வாகன சேவைகள் நடைபெற்றன.
இந்நிலையில், பிரம்மோற்சவ விழாவின் 8-ம் நாளான இன்று (05.12.24) தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு 'கோவிந்தா கோவிந்தா' என்று முழக்கமிட்டபடி திருத்தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
திருமலையின் ஜீயர்கள், தேவஸ்தான செயல் அதிகாரி சியாமளா ராவ், இணை செயல் அதிகாரி வீரபிரம்மம் மற்றும் அதிகாரிகள், பக்தர்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று திருத்தேரில் வலம் வந்த பத்மாவதி தாயாரை தரிசனம் செய்தனர்.
பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான பஞ்சமி தீர்த்தம், நாளை (6.12.2024) மதியம் 12.15 மணி முதல் 12.20 மணி வரை நடைபெற உள்ளது.