தினமும் பணம் கொடுக்கும் செடி முருங்கை!!

1 week ago 9

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள பிலாப்பூர் கிராமம் ஓர் அசலான விவசாய கிராமம். நெல், கரும்பு, காய்கறிப் பயிர்கள் என எங்கு பார்த்தாலும் பச்சை கட்டி நிற்கும் வயல்கள் நிறைந்திருக்கும் இந்த ஊரில் காய்கறி, வாழை, செடி முருங்கை என மாற்றி மாற்றிப் பயிர் செய்து தினசரி வருமானம் பார்க்கிறார் மோகன்ராம் என்ற விவசாயி. இதில் இவர் பயிர் செய்திருக்கும் செடி முருங்கையை கீரைக்காகவே பயன்படுத்தி வருகிறார். இன்றைய தேதியில் நகரப் பகுதிகளில் முருங்கைக் கீரைக்கு ஏகப்பட்ட கிராக்கி ஏற்பட்டிருக்கிறது. இதையுணர்ந்த மோகன்ராம் கீரை சாகுபடியால் நிறைவான லாபம் பார்த்து வருகிறார். ஒரு காலைப்பொழுதில் பிலாப்பூருக்குச் சென்றோம்.

“ சிறுவயதில் இருந்தே அப்பாவோடு வயலுக்குச் சென்று விவசாய வேலை பார்க்கிறேன். இந்த வேலைகளுக்கு இடையே டிப்ளமோ எலக்ட்ரிக்கல் படித்து முடித்தேன். படிப்பு முடிந்த பிறகு 10 வருடங்கள் ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்தேன். அப்போதும்கூட காலை, மாலை நேரங்களில் விவசாயம் பார்த்துவந்தேன். ஒரு கட்டத்தில் முழுநேரமாக விவசாயம் செய்யலாமென முடிவெடுத்து வேலையை விட்டுவிட்டு விவசாயத்தைத் தொடர்ந்தேன்.

எனக்குச் சொந்தமாக 2 ஏக்கர் நிலம் இருக்கிறது. அதில் ஒரு ஏக்கரில் நெல் பயிரிட்டு இருக்கிறேன். மீதமுள்ள இடத்தில் செடி முருங்கை, கத்தரி, வாழை, வெண்டை என பயிரிட்டு இருக்கிறேன். அதாவது 50 சென்ட் நிலத்தில் செடி முருங்கை பயிரிட்டு இருக்கிறேன்’’ என தனது விவசாய அனுபவம் குறித்து சுருக்கமாக பேசிய மோகன்ராமிடம் செடி முருங்கை சாகுபடி குறித்து கேட்டோம்.

செடி முருங்கையைப் பொறுத்தவரை 2 வருடங்களுக்கு கீரை பறித்து பயனடையலாம். நான் பிகேஎம் – 1 என்கிற ரகத்தை 50 சென்ட் நிலத்தில் பயிரிட்டு ருக்கிறேன். 50 சென்ட் நிலத்திற்கு சரியாக 2 கிலோ விதைகள் தேவைப்படும். இந்த 2 கிலோ விதைகளை ரூ.4000க்கு வாங்கினேன். விதைப்பதற்கு முன்பாக நிலத்தை நன்றாக இரண்டு முறை நேர் குறுக்காக உழ வேண்டும். அதன்பிறகு, 3 டன் தொழு உரத்தைக் கொட்டி உழ வேண்டும். பின், ரொட்டேவேட்டர் மூலம் மண்ணை சமன்படுத்தி பார் அமைத்து தண்ணீர் விட்டு விதைக்கத் தொடங்கலாம். கீரை என்பதால் அடர் விதைப்பு முறையில் விதைத்திருக்கிறேன். சரியாக 8வது நாள் மண்ணை விட்டு செடி மேலே வரத் தொடங்கும். அதைத் தொடர்ந்து செடிக்குத் தேவையான நேரத்தில் சொட்டுநீர்ப் பாசனம் மூலம் தண்ணீர் கொடுத்துவருகிறேன்.மண்ணில் இருந்து மேலே வந்த செடி சரியாக 75வது நாளில் அறுவடைக்குத் தயாராகும். அதாவது முதல் அறுவடைக்குத் தயாராகும்.

அந்த சமயத்தில் 50 சென்டில் இருந்து சராசரியாக 100 கீரைக் கட்டுகள் வரை அறுவடை செய்யலாம். 4வது மாதத்தில் இருந்து கீரை அதிகளவில் கிடைக்கத் தொடங்கும். அதாவது சராசரியாக 800 கட்டுகள் வரை அறுவடை செய்யலாம். சுழற்சி முறையில் 8 நாட்களில் 800 கட்டுகள் வீதம் அறுவடை செய்யலாம். முதல்நாள் அறுவடை செய்த செடியில் இருந்து அடுத்த 8வது நாளில் அறுவடை செய்யலாம். இப்படியாக முதல் 8 மாதம் அந்த செடிகளில் இருந்து கீரை அறுவடை செய்யலாம். அந்த 8 மாதத்தில் சராசரியாக 1000 கீரைக்கட்டுகள் வரை அறுவடை செய்யலாம். ஒரு கீரைக் கட்டு 1/2 கிலோ வரை எடை கொண்டதாக இருக்கும். அதன்பின் கவாத்து செய்து 2 மாதங்கள் இடைவெளி விட்டு மீண்டும் அதிலிருந்து கீரைகள் அறுவடை செய்யலாம்.

செடியை முறையாக பராமரித்து வந்தால் 2 வருடங்களில் 15,000 கீரைக்கட்டுகள் வரை அறுவடை செய்ய முடியும். அதன்பின், அந்த செடிகளில் இருந்து கீரைகள் பெரிதளவு கிடைக்காது என்பதால் அந்த இடத்தை சுத்தம் செய்துவிட்டு மீண்டும் அடுத்த பட்டத்தில் கீரையை விதைக்கலாம். இந்த செடி முருங்கைக்கு செலவு எனப் பார்த்தால் விதை, உழவு, களை பறிப்பு, மருந்து, கவாத்து என 2 வருடங் களில் ரூ.50 ஆயிரம் வரை செலவு ஆகும். அதேபோல் வருமானம் எனப் பார்த்தால் 2 வருடங்களில் 15 ஆயிரம் கீரைக்கட்டுகளை சராசரியாக ரூ.15க்கு விற்றாலும் கூட வருமானமாக ரூ.2,25,000 கிடைக்கும். தினசரி வருமானத்திற்கு உகந்த இந்த செடி முருங்கையை தேவைக்கு ஏற்ப வியாபாரிகள் கேட்கும்போது அறுவடை செய்து தாம்பரம், செங்கல்பட்டு, மதுராந்தகம் ஆகிய ஊர்களில் விற்பனைக்கு அனுப்பி வைக்கிறேன்’’ என மகிழ்வோடு பேசி முடித்தார்.
தொடர்புக்கு:
மோகன்ராம்: 90946 33132.

The post தினமும் பணம் கொடுக்கும் செடி முருங்கை!! appeared first on Dinakaran.

Read Entire Article