தற்போதைய அரசியலமைப்பில் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்பது சாத்தியமில்லை - ப.சிதம்பரம்

3 days ago 5

புதுடெல்லி,

மத்தியிலும், மாநில சட்டமன்றத்திலும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்தும் விதமாக, 'ஒரே நாடு ஒரே தேர்தல்' எனும் திட்டத்தை நாட்டில் அமல்படுத்த பாஜக முயற்சி செய்து வருகிறது. இதே திட்டத்தின் கீழ் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் குறிப்பிட்ட இடைவெளியில் தேர்தலை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது.

இந்த ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை பாஜக கடந்த முறை அதனை முக்கிய வாக்குறுதியாக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டது. தேர்தலுக்கு பின்னர் நடந்த சுதந்திர தின விழாவில் பேசிய பிரதமர் மோடி, ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அமலுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அடிக்கடி தேர்தல்கள் நடத்தப்படுவதால் நாட்டின் முன்னேற்றத்திற்கு தடைகள் உருவாகின்றன எனவும் தெரிவித்தார்.

இந்தநிலையில் இது குறித்த கேள்விக்கு பதிலளித்த மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் கூறியதாவது:

இதற்கான அரசியல் சட்டத் திருத்தங்களை மக்களவையிலோ அல்லது மாநிலங்களவையிலோ கொண்டு வருவதற்கு தற்போதைய அரசுக்கு பெரும்பான்மை இல்லை. கடந்த மாதம் தனது சுதந்திர தின உரையில், பிரதமர், ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற வலுவான கருத்தை முன்வைத்தார். அடிக்கடி தேர்தல் நடப்பது நாட்டின் முன்னேற்றத்திற்கு தடையை உருவாக்குகின்றன என்று வாதிட்டார்.

'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்பதற்கு அரசியலமைப்பு ரீதியான தடைகள் அதிகம் . அது தற்போது சாத்தியமில்லை. குறைந்தது ஐந்து அரசியலமைப்பு திருத்தங்கள் தேவை. இந்தியா கூட்டணி, ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதை முற்றிலும் எதிர்க்கிறது.

இரட்டை எஞ்சின் ஆட்சி என்று பாஜக பெருமை கொள்கிறது. ஒரு இன்ஜின் எரிபொருள் இல்லாமல் உள்ளது, மற்றொன்று முற்றிலும் பழுதடைந்துள்ளது. இப்படிப்பட்ட இரட்டை எஞ்சின் அரசாங்கத்தால் என்ன பயன்? இரண்டு என்ஜின்களையும் குப்பையில் போடும் நேரம் வந்துவிட்டது.

இவ்வாறு அவர் கூறினார்,

Read Entire Article