கோவை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தியாவின் சக்திவாய்ந்த மாமனிதர்கள் பட்டியலில் – உச்சமான 10 தலைவர்களில் ஒருவர் என இந்தியா டுடே – நவம்பர் மாத ஆங்கில இதழில் அறிவித்துப் பாராட்டியுள்ளது. இந்தியா டுடே ஆங்கில இதழின் நவம்பர் மாத இதழில் – “இந்தியாவில் அதிகார சபை” எனும் தலைப்பில் வெளியிட்டுள்ள கட்டுரையில் – இந்தியாவின் உச்சம் தொட்ட 10 தலைவர்களில் 8வது இடத்தில் சிறந்து விளங்குகிறார் என்று குறிப்பிட்டுப் பாராட்டியுள்ளது.
கோவை மாவட்டத்தில் ஒரு புரட்சி;
இன்று வெளிவந்துள்ள இந்த மாபெரும் பாராட்டுச் செய்தியுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட இரண்டு நாள் கோவை பயணத்திலும் கோவை மாவட்ட மக்களிடையே ஒரு புரட்சியை ஏற்படுத்தியுள்ளார்.
5.11.2024 அன்று காலை சென்னையில் இருந்து புறப்பட்டு விமானம் மூலம் கோவை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், கோவை விமான நிலையத்திலிருந்து விளாங்குறிச்சி தகவல் தொழில் நுட்பப் பூங்கா வரை வேன் மூலம் சென்றார்.
ஏறத்தாழ 5 கி.மீ தூரமுள்ள சாலையில் 10 நிமிட நேரத்தில் செல்லக்கூடிய பயண நேரம் 1 மணி நேரமாக நீண்டது. அந்த அளவுக்குச் சாலையின் இரண்டு புறங்களிலும் பெருந்திரளான மக்கள் கூடி தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை மகிழ்ச்சியோடு வரவேற்றதே அதற்குக் காரணம். தமிழ்நாடு முதலமைச்சர் வாகனம் அருகில் வந்ததும், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை வாழ்க.. வாழ்க.. என வாழ்த்தி எழுப்பிய முழக்கங்களுடன் வரவேற்ற காட்சி கோவை மக்களின் எழுச்சியைப் புலப்படுத்தியது.
ரூ.158.32 கோடியில் விளாங்குறிச்சி டைடல் பார்க் – தகவல் தொழில் நுட்பக் கட்டடத்தைத் திறந்து வைத்த திராவிட நாயகர்
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொகுப்புக் கோபுரம் மற்றும் உயர்தர அறுவை சிகிச்சை அரங்கு ரூ.164.95 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டு 13.3.2024 அன்று முதலமைச்சர் அவர்களால் திறந்துவைக்கப்பட்டது.
கோவை மாவட்ட குடிநீர் அபிவிருத்தித் திட்ட பில்லூர்-III பணிகள், பவானி நதியினை நீராதராமாகக் கொண்டு ரூ.780 கோடி மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. பெரியநாயக்கன்பாளையம் சந்திப்பில் ரூ.116 கோடி மதிப்பீட்டில் ஒரு மேம்பாலமும். கோச்சடை சந்திப்பில் ரூ.53.95 கோடி மதிப்பீட்டில் ஒரு மேம்பாலமும் கட்டப்பட்டுள்ளன. கோவை – சரவணம்பட்டி – நீலிப்பாளையம் சாலை அகலப்படுத்தும் பணி ரூ.73 கோடி மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ரூ.250 கோடி மதிப்பீட்டில் கோயம்புத்தூர் மாநகர் மேற்கு வட்டச் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
மேலும் பல அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டு நிறைவேற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கோவை மாவட்ட வளர்ச்சிக்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல் தொழில்நுட்பம் – தகவல் தொழில்நுட்பம் சார்ந்த தொழில்களை வளர்த்துத் தமிழ்நாட்டுப் பொருளாதாரத்தை உயர்த்திடும் நோக்கில் தகவல் தொழில் நுட்பத் தொழில்களைப் பெருக்குவதில் சிறப்புக் கவனம் செலுத்தி வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக-தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் கோவை விளாங்குறிச்சியில் ரூ.158 கோடியே 32 இலட்சம் ரூபாய்ச் செலவில் 2.94 இலட்சம் சதுர அடி பரப்பில் கட்டப்பட்டுள்ள தகவல் தொழில் நுட்பக் கட்டத்தைத் திறந்த வைத்தார். இக்கட்டடத்தின் இரண்டு அடித்தளங்களில் வாகனங்கள் நிறுத்துமிடமும், தரை மற்றும் 5 மேல் தளங்களில் தகவல் தொழில் நுட்பத் தொழில்களுக்கான இடவசதிகளும் அமைந்துள்ளன.
உலகத் தரத்திலான இந்த டைடல் பார்க் கட்டடத்தைத் திறந்து வைத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இக்கட்டடத்தில் பல்வேறு முன்னணித் தொழில் நிறுவனங்களுக்கு இடங்களை ஒதுக்கீடு செய்துள்ள ஆணைகளை தொழில் முகவர்களுக்கு வழங்கி வாழ்த்துகள் கூறினார். இந்தத் தொழில் வளாகத்தில் மட்டும் ஏறத்தாழ 3500 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
முதலமைச்சர் அவர்களுக்கு இளைஞர்களும் மகளிரும் மனம் திறந்த பாராட்டு
“தகவல் தொழில் நுட்பக் கட்டடம் கோவையில் திறந்து வைக்கப்படுவதன் மூலம் இளைஞர்களுக்கு நல்ல அனுபவம் கிடைக்கும்” என்றும், “எங்கள் ஊரிலேயே நாங்கள் வேலை பார்ப்பதற்கு ஒரு பொன்னான வாய்ப்பாக இன்று முதலமைச்சர் திறந்து வைத்துள்ள எல்காட் அமைந்துள்ளது” என்றும், “முதலமைச்சர் திறந்து வைத்த இந்தத் தகவல் தொழில்நுட்பப் பூங்கா மூலம் சென்னை, பெங்களூரு போன்ற பெருநகரங்களுக்கு இணையாக இனி கோவையும் மிளிரும்” என்றும், “வேலைவாய்ப்புக்காக இனி வெளி மாநிலங்கள் செல்லத் தேவையில்லை என்ற நிலையை உருவாக்கிய நம் முதல்வருக்கு நன்றி… நன்றி..” என்றும், “புதிதாக அமைந்துள்ள எல்காட் ஐடி பார்க்கில் பல புதிய நிறுவனங்கள் வருவதன்மூலம் தமிழ்நாட்டின் பொருளாதாரம் உயரும் என்றும், புதிய எல்காட் திறந்து வைத்து வேலைவாய்ப்புகளை அதிகப்படுத்திய முதலமைச்சருக்கு நன்றி” என்றும், இளைஞர்களும் மகளிரும் மிகுந்த மகிழ்ச்சி கொண்டு முதலமைச்சர் அவர்களைப் பாராட்டியுள்ளார்கள்.
கோவை மாவட்ட மக்களிடம் தனி பாசம் கொண்டுள்ள திராவிட நாயகர்;
தமிழ்நாட்டு மக்கள் அனைவரிடமும் அளவற்ற பாசம் கொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை மாவட்ட மக்களிடம் தனி பற்றும் பரிவும் கொண்டுள்ளார். உலகமே உயிர்ப்பலிகளைத் தந்து அஞ்சி நிற்கக்கூடிய அவலத்தை கொரோனா தொற்று ஏற்படுத்திய காலத்தில், தமிழ்நாட்டு முதலமைச்சராகப் பொறுப்பேற்ற 23ஆம் நாளிலேயே 30.5.2021 அன்று கோவை மாநகருக்கு வருகை தந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயர்அதிகாரிகள், அமைச்சர்கள் எல்லாம் தடுத்தும் புறக்கணித்து, “என் மக்களைக் காத்துத் தைரியம் அளிப்பதில் என்னுயிரே போனாலும் கவலையில்லை” எனக்கூறி கவச உடை அணிந்து கொரோனா வார்டுக்குள் சென்று பாதித்த மக்களுக்கு, “அச்சப்படாதீர்கள் உங்களுக்கு உதவிட நானிருக்கிறேன்“ என ஆறுதல் கூறியவர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2021இல் ஆட்சிப் பொறுப்பேற்றபின் அறிவித்துச் செயல்படுத்தும் பல்வேறு புதுமையான திட்டங்களில் ஒன்றான மக்களுடன் முதல்வர் திட்டத்தை, கோவை மாநகரில் 18.12.2023 அன்று தொடங்கி வைத்தார்கள். அதேபோல 6-12 வகுப்புகளில் அரசுப் பள்ளிகளிலும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்து உயர் கல்வியில் சேரும் மாணவர்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தை முதன்முதல் அறிமுகப்படுத்தித் தொடங்கி வைத்ததும் இந்தக் கோவை மாவட்டத்தில்தானே! எனவே, இந்தக் கோவை மாவட்டத்தில்தான் அரசின் நலத்திட்டங்கள் மக்களிடம் சென்று சேர்ந்துள்ளதா என்பதை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் புடைசூழச் சென்று கள ஆய்வில் ஈடுபட்டார்.
35 ஆண்டுகளில் முடியாததை 3 மணி நேரத்தில் முடித்த திராவிட நாயகர்;
கோவை விளாங்குறிச்சியில் தகவல் தொழில் நுட்பப் பூங்காவை தொடங்கி வைத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 12.30 மணியளவில் – கள ஆய்வில் முதலமைச்சர் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
அப்போது பொதுமக்கள் பலரும் அளித்த மனுக்களைப் பெற்றுக் கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு ஆணைகள் பிறப்பித்தார்.
முதலமைச்சர் அவர்களின் முன்னெடுப்புத் திட்டத்தின்கீழ், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் கையகப்படுத்தப் பட்டிருந்த கோயம்புத்தூர் வடக்கு, கோயம்புத்தூர் தெற்கு மற்றும் பேரூர் வட்டங்களைச் சேர்ந்த கிராமங்களில் உள்ள 468.89 ஏக்கர் நிலங்களுக்கு நில எடுப்பிலிருந்து விலக்களித்து அதற்கான விடுவிப்பு ஆணைகளை நில உரிமையாளர்களுக்கு வழங்கினார். இதன்மூலம் 35 ஆண்டுகாலப் பிரச்சனைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 மணிநேர கோவை மாவட்ட ஆய்வு மூலம் தீர்வு கண்டு சாதனை படைத்துள்ளார். முதலமைச்சர் அவர்களிடம் நில எடுப்பு விடுவிக்கப்பட்டு நில உரிமைக்கான ஆணையைப் பெற்றுக் கொண்ட பலரும் முதலமைச்சர் அவர்களை வெகுவாகப் பாராட்டியுள்ளார்கள்.
முதலமைச்சர் அவர்களைப் பாராட்டியுள்ள பொதுமக்கள்;
ஒரு பெண்மணி, “முதலமைச்சர் கையால் ஆணை வாங்கியது மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது” என்று கூறியுள்ளார்.
மற்றொரு பெண்மணி, “இடம் விற்க, வாங்க ஏதுவாக தனி பட்டா செய்து கொடுத்த முதலமைச்சருக்கு நன்றி” என்று கூறியுள்ளார்.
நில உரிமை பெற்ற ஒருவர், “எங்கள் கோரிக்கையை ஏற்று விலக்களித்த முதல்வருக்கு மனமார்ந்த நன்றிகள்” என்று கூறியுள்ளார்.
மற்றொருவர், “நெடுநாள் பிரச்சனையைத் தீர்த்து ஒளிமயமான எதிர்காலத்தை அமைத்து கொடுத்த முதலமைச்சர்”என்று பாராட்டியுள்ளார்,
மேலும், ஒருவர், “தீராத பிரச்சனையைத் தீர்த்து வைத்ததோடு அடுத்த தலைமுறைக்கும் வழிவகை செய்த நம் தமிழ்நாடு முதலமைச்சருக்கு மனமார்ந்த நன்றி ”என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
இப்படி, பல்வேறு பொதுமக்களின் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்குத் தேடித் தந்து வெற்றி குவித்துள்ளது. முதலமைச்சர் கோவையில் மேற்கொண்ட மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கள ஆய்வுப்பணி ஆகும்.
நகை தொழிலாளிகளைச் சந்தித்த முதலமைச்சர்;
கள ஆய்வின் தொடர்ச்சியாக கோவை கெம்பட்டிகாலனிக்கு நேரில் சென்று அங்கு, கணேஷ்குமார் என்னும் நகை தொழிலாளியின் பட்டறைக்குச் சென்று நகை தயாரிக்கும் முறைபற்றிக் கேட்டறிந்தார்.
முதலமைச்சர் அவர்களைப் பார்த்த மகிழ்ச்சியில் ஆனந்தம் அடைந்த கணேஷ்குமாரிடம் நகை செய்யும் தொழில், அவருடைய வாழ்வாதார நிலை குறித்துக் கேட்டறிந்தார். பின்னர் நகை தயாரிப்பாளர் கூட்டுக் குழுமத் தலைவர் ரகுநாதன் சுப்பையா பொற்கொல்லர்களின் வாழ்வாதாரம் உயர்வதற்கும் தொழில் முன்னேற்றத்துக்கும் தேவையான உதவிகளைச் செய்யுமாறு முதலமைச்சர் அவர்களிடம் கோரிக்கை விடுத்தார். இதற்கு, “நம்பிக்கையுடன் இருங்கள். தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்யும்” என்று முதலமைச்சர் அவர்களிடம் கூறி அப்போது அவர்களுக்கு மகிழ்ச்சியூட்டினார்.
தொழிலாளர்கள் தங்கும் விடுதி கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்த திராவிட நாயகர்;
கோவை போத்தனூர் சிட்கோ தொழிற்பேட்டை வளாகத்தில் 1.49 ஏக்கர் பரப்பளவில் ரூ.23 கோடி மதிப்பில் தொழிலாளர்கள் தங்கும் விடுதி கட்டப்பட்டு வருகிறது. 4 தளங்களில் 528 அறைகள் கொண்ட தங்கும் விடுதியின் கட்டுமான பணிகளைப் பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்டுமான பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
கோவையில் இரண்டாம் நாளில் செம்மொழிப் பூங்கா ஆய்வில் திராவிட நாயகர்;
இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலையில் கோவையில் நிறுவப்பட்டு வரும் செம்மொழிப் பூங்காவின் பணிகளைப் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். கோவையில் 2010ஆம் ஆண்டு ஜுன் 23 முதல் 27 வரை நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் அறிவிக்கப்பட்ட செம்மொழிப் பூங்கா உருவாக்கும் திட்டத்தை, கடந்த 9.8.2024 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை காந்திபுரத்தில் அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார்கள். ரூ.133 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும் இந்தப் பூங்கா அமைக்கும் பணிகளைப் பார்வையிட்டபின், 2025 ஜூன் திங்களில் செம்மொழிப் பூங்கா திறக்கப்படவிருக்கிறது என அறிவித்தார்.
300 கோடியில் பிரம்மாண்டமான தந்தை பெரியார் நூலகம் – அறிவியல் மையம் அடிக்கல் நாட்டு விழா
தமிழ்நாட்டின் 2024-25ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் கோவையில் நூலகம் மற்றும் அறிவியல் மையம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த நூலகம் 2026ஆம் ஆண்டு ஜனவரியில் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உரிய அரசாணை 3.9.2024 அன்று பிறப்பிக்கப்பட்டது. தந்தை பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையம் ரூ.300 கோடி மதிப்பீட்டில் கட்டப்படுகிறது. கோவை வடக்கு அனுப்பர்பாளையத்தில் இதற்காக 6 ஏக்கர் 98 சென்ட் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் தரைத்தளம் மற்றும் 7 தளங்களுடன் 1.98 இலட்ச சதுர அடி கட்டடப் பரப்பளவில் இது கட்டப்பட உள்ளது.
இந்த நூலகம் மற்றும் அறிவியல் மையத்திற்கு கோவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டியுள்ளார்.
இந்த மாபெரும் தந்தை பெரியார் நூலகமும் அறிவியல் மையமும் கோவை மாவட்ட மக்களின் குறிப்பாக இளைஞர்களின் அறிவு வளம்பெற வழிவகுக்கும் என்பது திண்ணமாகும். முதலமைச்சர் கோவை மாநகருக்குப் பெருமை சேர்க்கும் வகையில் இந்த அடிக்கல் நாட்டு விழாவில், உலகளவில் தங்க நகைகள் தயாரிப்பில் முக்கிய மையமாக விளங்கும் கோவைக்கு குறிச்சியில் உள்ள தொழிற்பேட்டையில் 126 கோடி ரூபாய்ச் செலவில் தொழில் வளாகம் கட்டப்படும் என்றும், NABL அங்கீகாரம் பெற்ற ஆய்வகம் உள்ளிட்ட எல்லா வசதிகளும் கொண்ட இந்த வளாகத்தில் 2000 பேருக்கு நேரடியாகவும் 1500 பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பது உட்பட சில அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளார்கள்.
இப்படி இந்த இரண்டு நாள்களிலும் கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சிகள் வாயிலாகப் பல்வேறு திட்டங்கள் செயலாக்கம் பெறுவதற்கு வழிவகுக்கப்பட்டு மாபெரும் புரட்சியையும் மக்களிடையே பெரும் எழுச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. இதன் மூலம் கோவை மாவட்ட மக்கள் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் கொண்டுள்ள மதிப்பு பலமடங்கு உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
The post தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் மாணவர்களை பயனடைய செய்து சிறப்பாக பணியாற்றிய மாவட்ட சமூகநல அலுவலர் மற்றும் துறை அலுவலர்களுக்கு முதல்வர் பாராட்டு appeared first on Dinakaran.