தமிழ்நாடு, கேரளா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பதவிக்காலம் முடிந்தும் ஒட்டிக் கொண்டிருக்கும் ஆளுநர்கள்: புதிய நெறிமுறைகளை வகுக்க ஒன்றிய அரசு முடிவு

4 weeks ago 6

டெல்லி: பதவிக்காலம் முடிந்தும் பதவியில் இருக்கும் ஆளுநர்களை மாற்றுவதற்கு முன்பாக, ஆளுநர்கள் நியமனத்தில் புதிய நெறிமுறைகளை வகுக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. நாடு முழுவதும் மாநிலங்களுக்கு ஆளுநர்களும், யூனியன் பிரதேசங்களுக்கு துணைநிலை ஆளுநர்களும் நியமிக்கப்படுகின்றனர். ஆளுநர் மற்றும் துணை நிலை ஆளுநர் பதவி என்பது மாநில மற்றும் யூனியன் பிரதேச அளவில் அரசியலமைப்பின் தலைமை பதவி என்பதால், அதற்கான நியமனத்தை குடியரசுத் தலைவர் மேற்கொள்வார். அந்த நியமனங்கள் பெரும்பாலும் பிரதமருடனான ஆலோசனையின் அடிப்படையிலேயே இருக்கும். ஆளுநர், துணை நிலை ஆளுநர் பதவியில் நியமிக்கப்படுபவர்களில் பெரும்பாலும் மூத்த அரசியல் தலைவர்கள், ஓய்வு பெற்ற ராணுவ உயரதிகாரிகள், ஐஏஎஸ், ஐபிஎஸ் உயரதிகாரிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சியை பிடித்த பின்னர், கடந்த ஜூலை மாதம் எட்டு மாநிலங்கள் மற்றும் புதுச்சேரிக்கு ஆளுநர்கள் மற்றும் துணைநிலை ஆளுநர்களை நியமித்தது, அவர்களில் ஏழு பேர் புதியவர்களாகவும், இருவர் வேறு மாநிலங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்த நிலையில் ஆளுநர் மற்றும் துணை நிலை ஆளுநருக்கான பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் நிறைவு செய்த பின்னரும், பலரும் தங்களது பதவிகளில் நீடிக்கின்றனர். அதனால் அவர்களுக்கு புதிய ஆளுநர்களை நியமிப்பதற்கான பட்டியலை ஒன்றிய பாஜக அரசு தயாரித்து வருகிறது. அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடக்கும் ஒன்றிய பட்ஜெட் கூட்டத்தொடரின் முதலாவது கூட்டத்துக்குப் பிறகு, ஐந்து ஆண்டுகள் பதவிக்காலத்தை நிறைவு செய்த ஆளுநர்கள், துணைநிலை ஆளுநர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்றும், அவர்களுக்கு பதிலாக வேறு நபர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

பெரும்பாலான மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தற்போது பதவியில் இருக்கும் ஆளுநர்கள் மற்றும் துணை நிலை ஆளுநர்கள், மோடியின் இரண்டாவது ஆட்சி காலத்தில் நியமனம் செய்யப்பட்டவர்கள் ஆவர். அவர்களின் ஐந்தாண்டு பதவிக்காலம் முடிந்தாலும் கூட, குடியரசுத் தலைவர் விரும்பும்வரை ஆளுநர் அல்லது துணை நிலை ஆளுநர் பதவியில் நீடிக்கலாம் என்பதால், அந்த சிறப்பு விதிகளின் கீழ் சிலர் பதவியில் இருந்து வருகின்றனர். மற்றொரு சிக்கலும் அரசியலமைப்பில் தெளிவாக வரையறுக்கப்படவில்லை. அதாவது ஒரு மாநிலத்தில் இரண்டு ஆண்டுகள் பதவி வகித்த ஆளுநர், மற்றொரு மாநிலத்தில் மூன்று ஆண்டுகள் பதவிக்காலத்தை நிறைவு செய்யும்போது அவரது ஒட்டுமொத்த பதவிக்காலத்தையும் கணக்கிட்டு ஐந்து ஆண்டுகளாக கவனத்தில் கொள்வதா? அல்லது முதலில் பணி செய்த மாநிலத்தை தனியாகவும் பின்னர் ஆளுநராக நியமிக்கப்பட்டவரின் பதவிக்காலத்தை அந்த மாநிலத்தில் அவர் பதவியேற்றதில் இருந்து கணக்கில் கொள்வதா? என்பது குழப்பமாகவே உள்ளது.

அந்த வகையில் பார்த்தால் தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி, கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், உத்தரபிரதேச ஆளுநர் ஆனந்தி பென் உள்ளிட்ட பலர், வேறு மாநிலங்களில் சில ஆண்டுகள் ஆளுநராக இருந்து விட்டு, தற்போது பதவி வகிக்கும் மாநிலத்திலும் பதவிக்காலத்தின் மீதமுள்ள ஆண்டுகளை நிறைவு செய்து வருகின்றனர். இவ்வாறு பதவிக்காலத்தை கடந்தும் சில ஆளுநர்கள் பதவியில் தொடர்வதை எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. அதனால் மகாராஷ்டிரா, அரியானா மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் முடிந்த பின்னர், ஆளுநர்கள் நியமனத்தில் சில நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

The post தமிழ்நாடு, கேரளா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பதவிக்காலம் முடிந்தும் ஒட்டிக் கொண்டிருக்கும் ஆளுநர்கள்: புதிய நெறிமுறைகளை வகுக்க ஒன்றிய அரசு முடிவு appeared first on Dinakaran.

Read Entire Article