தனுசு ராசிப் பெண் – குடும்பத்தின் விளக்கு

4 weeks ago 5

குரு ராசியில் பிறந்த தனுசு ராசிப் பெண்கள், குடும்பப் பிரியர்கள். அலுவலக நேரம் போக எஞ்சிய நேரங்களில் சமையல், தையல், பள்ளிப் பாடம், பிள்ளைகளின் பிராஜெக்ட் பணிகள், மாமனார் மாமியாருக்கு மருத்துவ சேவை, சொந்தக் காரர்களின் கல்யாணம், வளைகாப்பு, மரண வீடு என்ற சிந்தனை செயல்பாடுகளில், முழு ஆர்வத்துடன் ஈடுபடுவர். வீட்டு வேலைகளைச் செய்வதில் ஆர்வமும், ஈடுபாடும் காட்டுவர். வீட்டினர் மற்றும் சொந்தங்களுடன் நேரம் செலவழிக்க விரும்புவர். மகிழ்ச்சியாக சிரித்த முகத்துடன் அனைவரோடும் பேசுவார்.

பேச்சின் வசீகரம்

தனுசு ராசி பெண்கள், பேசத் தொடங்கும் போதே ஒரு கொக்கி போடுவார். இன்றைக்கு என்ன நடந்தது உங்களுக்கு தெரியுமா என்று ஒரு கேள்விக்கணையைத் தொடுத்து எதிராளிக்கு எதுவும் தெரியாது தனக்கு மட்டுமே விஷயங்கள் சரிவரத் தெரிந்திருக்கும் என்ற முதல் அம்பை எய்துவிட்டுத்தான் பேசத் தொடங்குவார். பின்பு மெல்ல மெல்ல திரைக்கதை சொல்வதைப் போல விவரிப்பார். இவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம். இடைவெளிவிடாமல்
மூன்று மணி நேரம்கூட பேசுவர்.

நல்ல மனைவி மற்றும் சிறந்த தாய்

சிறந்த இல்லத்தரசிகளாக விளங்கும் தனுசுராசிப் பெண்கள், மிகச் சிறந்த தாய்மார்களாக விளங்குவார்கள். தன் குழந்தை, கணவர், புகுந்தவீடு, பிறந்த வீட்டினர், நண்பர், சொந்தம், சுற்றத்தார் போன்றவர்களுக்காக சகல தியாகமும் செய்யத் தயாராக இருப்பார்கள். ஆனால், இவருடைய நேர்மையை, வாய்மையை சந்தேகப்பட்டால் இவர் புலியாக சீறுவார்.

அனுபவிக்க பிறந்தவர்கள்

தனுசு ராசி பெண்களுக்கு கலை ஆர்வமும், அழகியல் உணர்வும் அதிகம். குரு போக காரண என்பதால், குரு ராசியில் சிறந்த இவர்கள், அனைத்து போகங்களையும் அனுபவிக்க பிறந்தவர்கள். பல வகை உணவுகளைச் சாப்பிடுவது, பல இடங்களுக்குச் சுற்றுலா போவது, விதவிதமான ஆடைகளை அணிவது போன்றவை மிகவும் பிடிக்கும். ஆனால், ஆடம்பரப் பிரியர்களோ, சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப் படுகிறவர்களோ கிடையாது. சுடிதார் என்றாலும் அதில் சிறுசிறு புதிய டிசைன்கள் இருக்கும். சேலை ஜாக்கெட்டில் ஏதேனும் ஒரு அழகியல் விஷயம் இடம்பெற்று இருக்கும். இவர்களுக்குப் பெண் குழந்தைகள் இருந்தால், அவர்களையும் விதவிதமாக அலங்கரித்து பார்ப்பார்கள்.

ஷாப்பிங் டேஞ்சர்

சம்பாதிப்பதில் ஆர்வம் உள்ள தனுசு ராசிப் பெண்களுக்குப் பணத்தைச் சம்பாதிப்பதில் உள்ள ஆர்வம் செலவு செய்வதில் இருக்காது. ஆனால், பார்த்தவுடன் வாங்கிவிட வேண்டும் என்ற எண்ணம் இவர்களுக்கு இருக்கும். இதனால், இவர்கள் ஆன்லைன் ஷாப்பிங்கில் சிக்கிக் கொண்டால், தினமும் இவர்கள் வீட்டிற்கு பொருள் வந்து கொண்டே இருக்கும். காரணம், தங்கள் ஆசைப்படி வாழ்கின்றவர்கள்.

அனுதாபம் வேண்டாம்

எப்போதும் சிரித்த முகத்துடன் இருக்கும் தனுசு ராசி பெண்களுக்கு, வீட்டில் கணவனுக்கு சுகம் இல்லை பிள்ளைகளுக்கு சுகம் இல்லை என்றாலும்கூட அதற்கான அனுதாபத்தை எவரிடமும் வெளியே தேடுவது கிடையாது. மன அமைதியுடன் இருப்பார்கள். இவர்கள் மருத்துவ சிகிச்சை அளிப்பதில் விருப்பமுள்ளவர்கள். குழந்தை பராமரிப்பு, வயோதிகர் பராமரிப்பு ஆகியவற்றில் அருவருப்பில்லாமல் ஈடுபடுவார்கள். அதைப் பற்றி மற்றவர்களிடம் பிரமாதப்படுத்தி பேசுவதோ முறையீடாக சொல்வதோ கிடையாது. அதை ஒரு கடமையாக நினைத்து செய்துவிட்டு போய்விடுவார்கள்.

அதீத பக்தி உள்ளவர்கள்

தனுசு ராசி பெண்கள், பாரம்பரியப் பிரியர்கள். கோயிலுக்கு செல்வது, விரதம் இருப்பது, பூஜைகளில் கலந்து கொள்வது போன்றவை இவர்களுக்கு மிகவும் பிடிக்கும். தனது பாரம்பரியம் குறித்து இவர்கள் மனதுக்குள் ஒரு பெருமித உணர்வு இருக்கும். ஊர்ப்பற்று, மொழிப்பற்று என்று பழமைகளின்மீது மிகுந்த பற்று இருக்கும்.

குழந்தைகளுடன்

சிறந்த தாய்மாராக விளங்கும் தனுசு ராசி பெண்கள், சிறந்த குழந்தை பராமரிப்பாளர்கள். அவர்களுடன் விளையாடுவது, கதை சொல்வது, சேர்ந்து நாடகம் நடிப்பதில் இவர்களுக்கு விருப்பம் அதிகம். இவர்கள் `ரோல் பிளே’ (role play) செய்வதில் கெட்டிக் காரர்கள். பிள்ளைகளுக்குப் பல பயிற்சிகள் அளித்து பல்துறை வித்தகராக வளர்ப்பார்கள்.

கலையார்வம்

தனுசுராசி பெண்களுக்கு, பாட்டு, நடனம் ஆகியவற்றில் முறைப்படி பயிற்சி இல்லாவிட்டாலும், ஆர்வமும் விருப்பமும் இருக்கும். தேர்ச்சி பெற்றவர்கள் சிறப்பான நிகழ்த்துக் கலைஞர்களாக இருப்பார்கள். திரைப்படம் பார்ப்பதில், ஆர்வம் உண்டு. எந்த மொழிப் படமாக இருந்தாலும், பார்த்து கதை சொல்வார்கள். முதல் காட்சியிலேயே முடிவை சொல்லிவிடுவர்.

மனமும் மனையும்

தனுசுராசி பெண்கள் அதிகார மோகம் கொண்டவர்கள். தான் சொல்வதே சரி. அனைவரும் தன் பேச்சை கேட்கவேண்டும் என்ற எண்ணம் இவர்களுக்கு உண்டு. வயதாக வயதாக இந்த எண்ணம் அதிகரிக்கும். இவர்கள் மகிழ்ச்சியாக இருந்தால், இவர்கள் வீடும் சுத்தமாக இருக்கும். இவர்கள் பேச்சை வீட்டில் கணவரோ பிள்ளையோ கேட்கவில்லை என்றால், அந்த கோபத்தை வீட்டில் காட்டுவர். இவர்களைச் சுற்றி அனைத்தும் குப்பையாக கிடக்கும். அதைப் பற்றி கவலைப்பட மாட்டார்கள். இது எல்லோருக்கும் பொதுவான குணம்தானே என்றுகூட நினைக்கலாம். அப்படி அல்ல. தனுசு ராசி பெண்களை பொறுத்த அளவில், இவர்கள் மனம்தான் இவர்களைச் சுற்றி இருக்கும் உலகம். இவர்கள் மனம் போன போக்கில் போகின்றவர்கள். அதனால், இவர்கள் மனசு மகிழ்ச்சியாக இருந்தால், இவர்களைச் சுற்றி உள்ள உலகம் மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால், பெரும்பாலும் இவர்கள் எத்தகைய பெரிய துன்பங்களைகூட தாங்கிக் கொள்ளும் மனோ பலம் உடையவர்கள் என்பதால், இவர்கள் பெரும்பாலும் மகிழ்ச்சியாகத்தான் இருப்பார்கள்.

தனுசு பெண்ணுக்கு ஏற்ற தொழில்கள்

ஏழை எளியோர், குழந்தை முதியோர் போன்றவர்க்கு உதவி செய்யக்கூடிய அல்லது சிகிச்சை அளிக்கக் கூடிய வெயில் மழை பாராமல் வெளியே அலைந்து திரியக் கூடிய, இரவு பகல் பாராமல் அலுவலகத்தில் அமர்ந்து வேலை செய்யக் கூடிய எந்த தொழிலும் இவர்களுக்கு ஏற்றதுதான். சொற்பொழிவு, கவுன்சலிங், பிரசங்கம், ஆசிரியர், வார்டன் போன்றவை ஏற்ற தொழில்களாகும்.

நிறைவு

வேலை, குடும்பம் இரண்டையும் இருகண்களாக நினைத்து உழைக்கும் கடும் உழைப்பாளிகள்.

 

The post தனுசு ராசிப் பெண் – குடும்பத்தின் விளக்கு appeared first on Dinakaran.

Read Entire Article