சென்னை: தங்கம் விலை தொடர்ந்து ஜெட் வேகத்தில் அதிகரித்து நேற்று பவுன் ரூ.58 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை தொட்டது. பண்டிகை காலத்தில் தொடர் விலையேற்றம் நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சியடைய செய்து வருகிறது. போர் பதற்றம் காரணமாக உயர்ந்து வரும் தங்கம் விலை வரும் நாட்களில் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு குண்டுமணி அளவு தங்கமாவது வாங்க வேண்டும் என்பது நடுத்தர மக்களின் ஆசை மட்டுமல்ல, சேமிப்பு பற்றி குறிப்பிடும்போதெல்லாம் காலம் காலமாக கூறப்படும் ஓர் அறிவுரை. சேமிப்புக்கும் தங்கத்துக்கும் என்ன சம்பந்தம் என்று யோசிக்கவே தேவையில்லை.
காரணம், இது, உலகம் முழுவதும் அனைத்து நாடுகளிலும் கடைப்பிடிக்கப்படும் வழி முறைதான். ரிசர்வ் வங்கியே அவசர காலத்தில் நிதி தடுமாற்றத்தை சமாளிக்க தங்கத்தை வாங்கி இருப்பு வைக்கிறது. அந்த அளவுக்கு, வெறும் அழகு ஆபரணமாக மட்டுமின்றி, மிக முக்கியத்துவம் வாய்ந்த முதலீடாக தங்கம் திகழ்கிறது. ஸ்திரத்தன்மையற்ற நிலை ஏற்படும்போதெல்லாம் தங்கத்தில் முதலீடு அதிகரித்து வருகிறது. இதனால்தான், உலக நாடுகளிடையே போர் சூழும் போது, தங்கத்தில் முதலீடு அபரிமிதமாக மேற்கொள்ளப்படுகிறது. இதன் காரணமாக தேவை அதிகரித்து தங்கத்தின் விலையும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
தற்போது தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதற்கும் போர்தான் காரணம். ஒன்றல்ல… இரண்டு போர்கள். ரஷ்யா – உக்ரைன் இடையே கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி போர் மூண்டது. அப்போது சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 1,900 அமெரிக்க டாலர். அடுத்த ஒரு சில வாரத்திலேயே, அதாவது 2022 மார்ச் 8 தேதி சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம். 2,000 டாலரை தாண்டி, 2,046 டாலரானது. ரஷ்யா உக்ரைன் போரால் ஏற்பட்ட ஸ்திரத்தன்மையற்ற நிலையும், பண வீக்கமும் தங்கத்தில் முதலீடு அதிகரித்து விலை உயர வழிவகுத்து விட்டன.
போர் தொடர்ந்து தீவிரம் அடைந்ததால், தங்கம் விலை குறைய வழியில்லாமல் போய்விட்டது. உக்ரைன் – ரஷ்யா போருக்கு அடுத்ததாக, 2023 அக்டோபர் 7ம் தேதி ஹமாஸ் படையினர் இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தி 1,200 பேரை கொன்றதில் தொடங்கி இன்று வரை ஓராண்டை கடந்தும் போர் ஓயவில்லை. நேற்று நிலவரப்படி ஒரு அவுன்ஸ் (31.1 கிராம்) தங்கம் விலை சுமார் 2,736 டாலர் . இது, முந்தைய நாள் வர்த்தகத்துடன் ஒப்பிடுகையில் 28.9 டாலர், அதாவது, 1.07 சதவீதம் அதிகம்.
இதன் காரணமாக இந்தியாவிலும் ஆபரண தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே வந்து விட்டது. இந்த ஆண்டு துவக்கத்தில், அதாவது, கடந்த ஜனவரி 1ம் தேதி சென்னையில் ஆபரண தங்கம் ஒரு பவுன் ரூ.47,280. நேற்று ரூ.5,8240. 10 மாதங்களில் ரூ.10,000க்கு மேல் அதிகரித்து விட்டது. கடந்த ஜூலை மாதம் ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் தங்கம் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டது. இதன் காரணமாக, அன்று ஒரே நாளில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,200 வரை குறைந்தது.
அதுவும், நகை வர்த்தகர்கள் உட்பட பல்வேறு தரப்பில் இருந்தும் பல காலமாக தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டதால் எடுக்கப்பட்ட நடவடிக்கை இது. இல்லாவிட்டால், கடந்த 10 மாதங்களில் சவரனுக்கு ரூ.12,000க்கு மேல் உயர்ந்திருக்கும். ஆயினும், இந்த விலை குறைவு என்பது சில நாட்கள் தான் நீடித்தது. அதன் பிறகு மீண்டும் தங்கம் விலை உயர தொடங்கியது. அதுவும் இதுவரை இல்லாத அளவுக்கு தங்கம் விலை உயர்ந்து நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி வந்தது.
இதன் ஒரு பகுதியாக கடந்த 16ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ஒரு பவுன் ரூ.57,120க்கு விற்கப்பட்டது. அதே நேரத்தில் தங்கம் விலை வரலாற்றில் அதிகப்பட்ச விலை என்ற புதிய உச்சத்தை தொட்டது. தொடர்ந்து 17ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு பவுன் ரூ.57,280க்கு விற்கப்பட்டது. இதன் மூலம் தங்கம் விலை மீண்டும் புதிய உச்சத்தை தொட்டது. இந்த அதிர்ச்சியை தாங்குவதற்குள் நேற்று முன்தினம் தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்தது. நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 அதிகரித்து ஒரு கிராம் ரூ.7240க்கும், சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு பவுன் ரூ.57,920 என்ற புதிய உச்சத்தையும் தொட்டது.
இப்படியே விலை உயர்ந்தால் தங்கம் விலை பவுன் ரூ.58 ஆயிரத்தை தாண்டி விடுமோ? என்ற அச்சம் நகை வாங்குவோர் இடையே ஏற்பட்டது. நகை வாங்குவோர் கவலைப்பட்டது போல் நேற்று தங்கம் விலை மேலும் அதிரடியாக உயர்வை சந்தித்தது. நேற்று மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,280க்கும், சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு பவுன் ரூ.58,240க்கும் விற்கப்பட்டது. இதன் மூலம் தங்கம் விலை பவுன் ரூ.58 ஆயிரத்தை கடந்து தங்கம் விலை வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்டது.
அதே நேரத்தில் தொடர்ச்சியாக 4 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,480 உயர்ந்தது. இப்படியே ஜெட் வேகத்தில் தங்கம் விலை அதிகரித்தால் வெகு விரைவில் பவுன் ரூ.60 ஆயிரத்தை கடந்து விடுமோ? என்ற அச்சம் நகை வாங்குவோர் இடையே நிலவி வருகிறது. அதே நேரத்தில் வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.2 அதிகரித்து ஒரு கிராம் ரூ.107க்கு விற்பனையாகி வருகிறது.
கிலோவுக்கு இரண்டாயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து ஐந்தாயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது. வரும் 31ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 11 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ளது. இந்த நேரத்தில் தங்கம் விலை உயர்ந்து வருவது பண்டிகை காலத்தில் நகை வாங்க காத்திருப்பவர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது.
* பிற காரணிகள்
தங்கம் விலை உயர்வதற்கு மத்திய கிழக்கு நாடுகளின் போர் பதற்றம் ஒருபுறம் இருக்க, அமெரிக்க பெடரல் வங்கியின் வட்டி நிர்ணய முடிவு, வேலை வாய்ப்பு தொடர்பான புள்ளி விவரங்களும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. தற்போது இதில் சமீபமாக சேர்ந்திருப்பது, அமெரிக்க தேர்தல். கடந்த 2 வாரங்களாக இந்த விஷயமும் தங்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகுகிறது.
வாக்குப்பதிவுக்கு 3 வாரங்களே எஞ்சியுள்ள நிலையில் கமலா ஹாரிஸ் மற்றும் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் இடையே கடும் போட்டி நிலவுவதாக சமீபத்திய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. இதனால் தேர்தல் முடிவுகள் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பது பற்றிய உறுதியற்ற தன்மை அதிகரித்துள்ளது. கருத்துக்கணிப்புகள் டிரம்பை விட ஹாரிஸ் சற்று முன்னணியில் இருப்பதாக காட்டினாலும் , உறுதியான சாத்தியக்கூறு இல்லாத நிச்சயமற்ற தன்மையே நிலவுகிறது. இது வும் தங்கம் விலை உயர முக்கிய காரணம் என சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.
* சர்வதேச சந்தையில் போரால் ஸ்திரத்தன்மையற்ற நிலை ஏற்படுவதால் தங்கத்தில் முதலீடு அதிகரித்து சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்வது, இந்தியச் சந்தையிலும் எதிரொலித்து வருகிறது. ரஷ்யா உக்ரைன், இஸ்ரேல் – ஹமாஸ் போரின்போது சர்வதேச சந்தை மற்றும் இந்திய சந்தையில் (சென்னை யில் ஆபரண தங்கம்) தங்கம் விலை ஒப்பீடு.
* ரஷ்யா – உக்ரைன் இடையே கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி போர் துவங்கியது. அன்றைய நாளில் சர்வதேச சந்தையில் 1,900 டாலர். அதே நாளில் சென்னையில் ஆபரண தங்கம் விலை பவுன் ரூ.39,608. அன்று ஒரு பவுன் ரூ.1,856 அதிகரித்தது.
* அடுத்ததாக, ஹமாஸ் – இஸ்ரேல் போரின்போது சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் சுமார் 1,860 டாலர். அப்போது, சென்னையில் ஆபரண தங்கம் பவுன் ரூ.42,960. ஓராண்டு கழித்து, கடந்த 7ம் தேதி ஒரு அவுன்ஸ் தங்கம் சுமார் 2,630 டாலர் . சென்னையில் ஆபரண தங்கம் பவுன் ரூ.56,800.
* ஒரு வாரத்தில், மார்ச் 8ம் தேதி ஒரு அவுன்ஸ் 2,000 டாலரை தாண்டியபோது, சென்னையில் ஆபரண தங்கம் பவுன் ரூ.40,448.
* நேற்று நிலவரப்படி ஒரு அவுன்ஸ் (31.1 கிராம்) தங்கம் விலை சுமார் 2,736 டாலர் . சென்னையில் ஆபரண தங்கம் பவுன் ரூ. 58,240. இதில் இருந்தே, சர்வதேச சந்தையில் ஏற்படும் போர் பதற்றங்கள், ஸ்திரத்தன்மையற்ற நிலை தங்கத்தின் விலையை எப்படி பாதிக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடியும்.
* 10 நாளில் தங்கம் விலை
தேதி பவுன் கிராம்
09/10/2024 ரூ.56240 ரூ.7030
10/10/2024 ரூ.56200 ரூ.7025
11/10/2024 ரூ.56760 ரூ.7095
12/10/2024 ரூ.56960 ரூ.7120
14/10/2024 ரூ.56960 ரூ.7120
15/10/2024 ரூ.56760 ரூ.7095
16/10/2024 ரூ.57120 ரூ.7140
17/10/2024 ரூ.57280 ரூ.7160
18/10/2024 ரூ.57920 ரூ.7240
19/10/2024 ரூ.58240 ரூ.7280
The post தங்கம் விலை புதிய உச்சம் பவுன் ரூ.58 ஆயிரம் தாண்டியது: அமெரிக்க தேர்தல், போர் நடைபெறுவதால் உலக சந்தையில் மேலும் விலை அதிகரிக்க வாய்ப்பு appeared first on Dinakaran.