மும்பை,
இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்திற்கான டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட் செய்த நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 235 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 59.4 ஓவர்களில் 263 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக சுப்மன் கில் 90 ரன்கள் எடுத்தார். இதனையடுத்து 28 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து 174 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக வில் யங் 51 ரன்கள் எடுத்தார். இந்தியா தரப்பில் அபாரமாக பந்துவீசிய ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளும், அஸ்வின் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதன் மூலம் இந்திய அணிக்கு 147 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
147 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 92 ரன்னுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து ஆடி வருகிறது. முன்னதாக இந்தப் போட்டியில் மூத்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் உலகப் புகழ்பெற்ற வான்கடே மைதானத்தில் அதிக விக்கெட் (டெஸ்ட் கிரிக்கெட்) வீழ்த்திய இந்திய வீரர் என்ற அனில் கும்ப்ளேவின் சாதனையை முறியடித்துள்ளார்.
1975 முதல் டெஸ்ட் போட்டிகளை நடத்தி வரும் மும்பை மைதானத்தில் இதற்கு முன் அனில் கும்ப்ளே 7 போட்டிகளில் 38 விக்கெட்டுகள் எடுத்ததே முந்தைய சாதனையாக இருந்தது. ஆனால் அஸ்வின் 6 போட்டியிலேயே 41 விக்கெட்டுகள் எடுத்து அனில் கும்ப்ளேவின் சாதனையை முறியடித்துள்ளார்.