
புதுடெல்லி,
'கிராண்ட்ஸ்லாம்' அந்தஸ்து கொண்ட விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜானிக் சினெரும் (இத்தாலி), மகளிர் பிரிவில் இகா ஸ்வியாடெக்கும் (போலந்து) சாம்பியன் பட்டம் வென்றனர்.
இதனையடுத்து சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் ஆண்கள் பிரிவில் ஜானிக் சினெர் மாற்றமின்றி முதலிடத்தில் தொடர்கிறார். அல்காரஸ் 2-வது இடத்தில் நீடிக்கிறார். ஸ்வரெவ் 3-வது இடத்திலும், டெய்லர் பிரிட்ஸ் 4-வது இடத்திலும் (ஒரு இடம் உயர்வு), ஜாக் டிராபர் (ஒரு இடம் குறைந்து) 5-வது இடத்திலும் உள்ளனர். முன்னணி வீரர் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6-வது இடத்தில் இருக்கிறார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதலிடத்தில் அரினா சபலென்காவும் (பெலாரஸ்), 2-வது இடத்தில் அமெரிக்காவின் கோகோ காப்பும் மாற்றமின்றி தொடருகிறார்கள். விம்பிள்டன் பட்டத்தை வசப்படுத்திய ஸ்வியாடெக் ஒரு இடம் முன்னேறி 3-வது இடத்தை பிடித்துள்ளார். இதன் இறுதிசுற்றில் தோல்வி அடைந்த அமெரிக்காவின் அமன்டா அனிசிமோவா 5 இடங்கள் எகிறி தனது சிறந்த தரநிலையாக 7-வது இடத்தை பெற்றுள்ளார்.