டூவீலரில் படுத்துக்கொண்டு சாகசம் செய்தவருக்கு அபராதம்

1 week ago 4

*லைசென்சை ரத்து செய்ய பரிந்துரை

ராசிபுரம் : ராசிபுரத்தில், ரயில்வே மேம்பாலத்தில் டூவீலரில் படுத்துக் கொண்டு சாகச பயணம் செய்தவருக்கு, போக்குவரத்து போலீசார் ரூ.8200 அபராதம் விதித்தனர். மேலும், அவரது ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்யவும் பரிந்துரை செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் இருந்து சேலம் செல்லும் சாலையில் உள்ள மேம்பாலத்தில், நேற்று முன்தினம் ஒருவர் டூவீலரில் சென்று கொண்டிருந்தார். ரயில்வே மேம்பாலத்தின் மீது செல்லும்போது, வண்டி சீட்டில் மல்லாந்து படுத்துக்கொண்டே டூவீலரை ஓட்டிச்சென்றார்.

எதிரே வாகனம் வரும்போது அவர் எழுந்து கொண்டார். இதனை பின்னால் வந்தவர்கள், வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். இந்த காட்சி வைரலானது. இது தினகரன் நாளிதழில் படத்துடன் வெளியானது.இதையடுத்து, ஹெல்மெட் போடாமல் ஆபத்தான முறையில் டூவீலரை ஓட்டிச் சென்றது தொடர்பாக, ராசிபுரம் போக்குவரத்து போலீசார் சம்மந்தப்பட்ட நபரை தேடி வந்தனர்.

இதில், ராசிபுரம் சிவானந்தா சாலை பகுதியைச் சேர்ந்த பாக்கியசெல்வன் மகன் ஜெபதுரை(35) என்பவர், சாகச பயணத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவர் மீது ஆபத்தான முறையில் வண்டி ஓட்டியதாக, போக்குவரத்து ஆய்வாளர் நடராஜன் வழக்குப்பதிவு செய்தார். மேலும்,ரூ.8200 அபராதம் விதித்ததுடன், அவரது ஓட்டுனர் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய ஆர்டிஓவுக்கு பரிந்துரை செய்தார்.

The post டூவீலரில் படுத்துக்கொண்டு சாகசம் செய்தவருக்கு அபராதம் appeared first on Dinakaran.

Read Entire Article