சென்னை,
போக்குவரத்து ஊழியர்களுக்கு முழுமையாக ஓய்வு கால பலன்களை வழங்க வேண்டும். டிரைவர்-கண்டக்டர் (டி அண்ட் சி) என நியமிக்காமல், இரு பணிகளுக்கும் தனித்தனியே ஊழியர்களை நியமிக்க வேண்டும். தனியார் பஸ்களை வாடகைக்கு எடுத்து இயக்குவதை கைவிட வேண்டும்.
வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தொ.மு.ச. பேரவை பொருளாளர் கி.நடராஜன், சி.ஐ.டி.யு. பொதுச்செயலாளர் கே.ஆறுமுகநயினார் உள்ளிட்ட நிர்வாகிகள், சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத்துறை கூடுதல் தலைமைச் செயலர் க.பணீந்திர ரெட்டியை சந்தித்தனர்.
அப்போது, ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை டிசம்பர் 2-வது வாரத்துக்குள் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என்றும், ஓய்வு கால பணப்பலன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போக்குவரத்துத்துறை செயலாளர் தெரிவித்து உள்ளார். மேலும் அரசின் பண உதவியை பெற்று அகவிலைப்படி உயர்வு வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும், வரவு-செலவுக்கு இடையேயான வித்தியாசத் தொகை தொடர்பான கோப்பு அரசின் பரிசீலனையில் உள்ளது என்றும் சங்க நிர்வாகிகளிடம் போக்குவரத்துத்துறை செயலாளர் தெரிவித்து உள்ளார்.