சென்னை,
சென்னை கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை உள்ளது. இங்குள்ள புற்றுநோய் சிகிச்சை பிரிவில் சிறப்பு டாக்டராக பாலாஜி (வயது 53) பணிபுரிந்து வருகிறார். நேற்று காலை 10.30 மணி அளவில் டாக்டர் அங்குள்ள புறநோயாளிகள் பிரிவில் உள்ள அறையில் இருந்து நோயாளிகளுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கிக்கொண்டிருந்தார்.
அப்போது, அங்கே வந்த ஒரு வாலிபர், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த 6 மாதங்களாக சிகிச்சை பெற்ற தன்னுடைய தாயாருக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று டாக்டரிம் வாக்குவாதம் செய்தார்.
சரியான முறையில்தான் உங்கள் தாயாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது என்று டாக்டர் பதில் கூறியுள்ளார். இருந்த போதிலும், ஆத்திரம் அடங்காத அந்த வாலிபர் கையில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து டாக்டர் பாலாஜியை சரமாரியாக குத்தினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு நின்ற நோயாளிகளின் உறவினர்களும், மருத்துவமனை ஊழியர்களும் ஓடிவந்தனர்.
உடனடியாக டாக்டர் பாலாஜி மீட்கப்பட்டதைதொடர்ந்து, அங்கு பணியில் இருந்த டாக்டர்கள் அவருக்கு உடனடியாக சிகிச்சை அளித்தனர். அவரது தலை, கழுத்து, முதுகு, காதின் பின்பகுதி, நெற்றி உள்பட 7 இடங்களில் கத்திக்குத்து விழுந்திருந்தது.
தகவல் அறிந்து விரைந்து வந்த. கிண்டி போலீசார் வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். அந்த வாலிபரின் பெயர் விக்னேஷ் (25) என்பதும், சென்னை தாம்பரத்தை அடுத்த புது பெருங்களத்தூர் காமராஜர் நகர் 1-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. அந்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரித்து வந்தனர்.
இதனைத்தொடர்ந்து கத்திக்குத்து தாக்குதல் நடத்திய விக்னேஷ் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கொலை முயற்சி, ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் கிண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சூழலில் டாக்டரை தாக்கிய விக்னேசுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் டாக்டர் மீதான தாக்குதல் சம்பவத்தை கண்டித்து இன்று காலை தர்ணாவில் ஈடுபட உள்ளனர். அரசு மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி காலை 8 மணி முதல் 10 மணி வரை தர்ணா நடைபெறும் என்று அரசு மருத்துவ சங்க நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். அலுவல் கூட்டங்களை புறக்கணித்து ஆர்பாட்டம், கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.