டாக்டர் மீது கத்திக்குத்து தாக்குதல்; தனிப்பட்ட சம்பவமாக பார்க்கக் கூடாது - வானதி சீனிவாசன்

1 week ago 3

சென்னை,

சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் டாக்டர் பாலாஜி ஜெகன்நாதன் என்பவரை, மருத்துவமனை வளாகத்திற்குள் இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கத்தியால் குத்தப்பட்ட டாக்டர் பாலாஜி, படுகாயங்களுடன் அதே மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

டாக்டர் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். டாக்டர் பாலாஜிக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளை அளித்திடவும், இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், டாக்டர் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டதை தனிப்பட்ட சம்பவமாக பார்க்கக் கூடாது என பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது;-

"அரசு டாக்டர் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது அதிர்ச்சிகரமான செய்தியாக இருக்கிறது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு எவ்வளவு சீர்கெட்டுள்ளது என்பதற்கு இது சமீபத்திய உதாரணம். காவல்துறை அதிகாரிகள், அரசு அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், தற்போது டாக்டர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனைகளில் போதிய அளவு மருந்துகள் கிடையாது, போதுமான ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் கிடையாது. செவிலியர்களும், டாக்டர்களும் ஒருபுறம் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவிற்கே திராவிட மாடல்தான் வழிகாட்டுகிறது என்று சொல்லும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், டாக்டர் மீதான கத்திக்குத்து தாக்குதலை தனிப்பட்ட சம்பவமாக பார்க்கக் கூடாது.

ஒரு நோயாளியின் உறவினர் உணர்ச்சிவசப்பட்டு தாக்கினார் என்று மட்டும் சொல்ல முடியாது. இன்று அரசு மருத்துவமனைகளின் நிலை இவ்வாறுதான் இருக்கிறது. அரசு மருத்துவமனையில் இருப்பவர்களின் பணிச்சுமையை இந்த அரசு முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இந்த தாக்குதல் சம்பவத்தை கடுமையாக கண்டிக்கிறோம். இது தனிப்பட்ட சம்பவம் அல்ல, அரசாங்கத்தின் தோல்வி."

இவ்வாறு வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

Read Entire Article