மதுரை: டங்ஸ்டன் திட்டம் தொடர்பாக தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து அமைச்சர் பி.மூர்த்தி அரிட்டாபட்டி மக்களுடன் பேசிச் சென்ற பின்னர், அக்கிராம மக்கள் தமிழக அரசு வழங்கிய பொங்கல் தொகுப்பு பொருட்களை ரேஷன் கடைகளில் ஒப்படைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பொங்கல் தொகுப்பு விநியோகம்: தமிழக அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் தொகுப்பு பொருட்கள் வழங்கி வருகிறது. அதனை முன்னிட்டு அரிட்டாபட்டி, நரசிங்கம்பட்டி பகுதியில் இன்று (ஜன.9) ரேஷன் கடைகள் மூலம் பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் அரிட்டாபட்டியில் 820 குடும்ப அட்டைதாரர்களும், நரசிங்கம்பட்டியில் 444 குடும்ப அட்டை தாரர்களும் உள்ளனர். இதில் 100-க்கும் மேற்பட்டோர் பொங்கல் தொகுப்பு பொருட்கள் வாங்கிச் சென்றனர்.