ஜோ பைடன், கமலா ஹாரிசை கொல்ல யாரும் முயற்சி கூட செய்யவில்லை - எலான் மஸ்க் சர்ச்சை பதிவு

3 days ago 7

வாஷிங்டன்,

அமெரிக்காவில் வருகிற நவம்பரில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் குடியரசு கட்சியின் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டு உள்ளார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.இந்த சூழலில், சமீபத்தில் பென்சில்வேனியாவின் பட்லர் பகுதியில் நடந்த பேரணியில் டிரம்ப் பங்கேற்றபோது, அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. துப்பாக்கி குண்டு அவருடைய வலது காதின் மேல் பகுதியை துளைத்து சென்றது. துப்பாக்கி சூடு நடத்திய நபர் சுட்டு கொல்லப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் நேற்று டிரம்ப், மேற்கு பாம் பீச் பகுதியில் உள்ள டிரம்ப் சர்வதேச கோல்ப் கிளப்புக்கு சென்று, கோல்ப் விளையாடி கொண்டு இருந்துள்ளார். அப்போது, திடீரென அவருடைய பார்வைக்கு உட்பட்ட தொலைவில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் பாதுகாப்பான பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். டிரம்ப் இருந்த பகுதிக்கு அருகில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்த ஒருவர், டொனால்டு டிரம்ப்பை ஏன் கொல்ல முயற்சிக்கின்றனர்..? என்று எக்ஸ் வலைதளத்தில் கேள்வி எழுப்பி இருந்தார். அதனைப் பகிர்ந்த எலான் மஸ்க், "பைடன் மற்றும் கமலாவை யாரும் கொல்வதற்காக முயற்சிகூட செய்யவில்லை" என்று பதிவிட்டார். இந்த கருத்து பல்வேறு தரப்பில் இருந்து கடுமையான விமர்சனத்தை ஏற்படுத்தியது. மேலும் எலான் மஸ்கின் இந்த கருத்து மிகவும் பொறுப்பற்றது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளரான டிரம்ப்புக்கு, எலான் மஸ்க் ஆதரவு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article