சென்னை: ஆர்ப்பாட்டத்தின்போது தொண்டர்கள் பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததற்கு மாற்று ஏற்பாடு செய்து தருவதாக தவெக சார்பில் சென்னை மாநகராட்சியில் மனு அளிக்கப்பட்டுள்ளது. சேப்பாக்கம் சிவானந்தா சாலையில் தவெக தலைவர் விஜய் தலைமையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடந்தது. 28 நிமிடங்கள் மட்டுமே நடந்த அதில் இரண்டே முக்கால் நிமிடமே விஜய் பேசினார்.
கூட்டத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தவெக இளைஞர்கள் மட்டுமே வந்திருந்தனர். அவர்கள், சாலை தடுப்புகளை உடைத்து சேதப்படுத்தினர். பூந்தொட்டிகளை உடைத்து நொறுக்கினர். சாலைகளையும் சேதப்படுத்தினர். மேலும் அந்த வழியாக சென்ற பொதுமக்களையும் மறித்து வாகனங்களில் செல்ல விடாமல் தடுத்தனர். இதனால் பொதுமக்களுக்கும் தொண்டர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்நிலையில், பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததாக சென்னை மாநகராட்சி சார்பில் போலீசில் புகார் கொடுத்தால், போலீசார் வழக்குப்பதிவு செய்வார்கள் என்ற கருத்து நிலவியது. இதுகுறித்து தகவல் வெளியானதும், சென்னை மாநகராட்சி அதிகாரிகளிடம் தவெக சார்பில் ஒரு மனு கொடுக்கப்பட்டது.
அந்த மனுவில், தவெக ஆர்ப்பாட்டத்தின்போது பொதுச் சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டது தெரியவந்துள்ளது. அவற்றை நாங்களே சரி செய்து கொடுக்கிறோம். சேத விவரங்களை தெரிவித்தால் அதற்கான பணத்தை கட்டிவிடுகிறோம் என்று கூறியுள்ளனர். இதை மாநகராட்சி அதிகாரிகள் ஏற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது.
The post ‘சேதங்களை சரி செய்து தருகிறோம்’ சென்னை மாநகராட்சியில் தவெக வாக்குறுதி மனு appeared first on Dinakaran.